சென்னை: மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஆட்சி செய்வது யார் என்ற தேர்தல் திருவிழா இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழகத்தின் 14வது மக்களவைத் தொகுதியான கள்ளக்குறிச்சியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,68,681 ஆகும். அதில், 12,42,597 பேர் வாக்கு செலுத்தினர். அதாவது, வாக்கு சதவிகிதம் 79.21 ஆகும். தருமபுரிக்கு அடுத்து அதிக வாக்குகளை செலுத்திய தொகுதியாக கள்ளக்குறிச்சி விளங்கியது.
கடந்த 2008ஆம் ஆண்டு தொகுதி மறு சீராய்வு செய்யப்பட்டு, சேலம் மற்றும் விழுப்புரம் பகுதியிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. இதில் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கங்கவள்ளி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி) ஆகிய 4 தனி சட்டமன்றத் தொகுதிகளும், இரு பொது தொகுதிகளை கொண்டதுதான் இந்த கள்ளக்குறிச்சி.
திமுகவின் கோட்டை: இந்த தொகுதி திமுகவின் கோட்டை என்றே இன்றுவரை சொல்லப்படுகிறது. கடந்த 1967ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு வரை திமுகவே ஆட்சி செய்திருக்கிறது. அது போல், 2008ல் தொகுதி பிரிக்கப்பட்ட பிறகு 2009ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் திமுக வேட்பாளரே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த காமராஜ் வென்றார். பிறகு 2019ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த பொன் கவுதம சிகாமணி வென்றார்.
ஆனால், இம்முறை கவுதம சிகாமணிக்கு திமுக தலைமை போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. காரணம், பொன்முடி மீதான அமலாக்கத்துறை வழக்குகள் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் மக்களால் பேசப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டால், நடந்த மூன்று தேர்தல்களிலும் திமுகவே அதிக முறை வென்றுள்ளது. இம்முறை திமுக சார்பில் போட்டியிட்ட மலையரசன் தொகுதிக்கு புதியவர் என்பதனால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை என கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவித்தன.
ஆனால், அதே நேரத்தில் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறை வென்ற அதிமுக மாவட்டச் செயலாளரான குமரகுரு, முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரியவரான இவர், சி.வி சண்முகத்தின் நேரடி ஆதரவு பலத்துடன் தேர்தலில் போட்டியிட்டார்.
விஜயகாந்த் தோல்வி: அதோடு மட்டுமல்லாது, தேமுதிகவின் பலத்தோடு இறங்கியுள்ளார். குறிப்பாக, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிட்டு, அவரை வென்று இணையத்தில் மிகவும் பிரபலம் அடைந்தார் குமரகுரு. ஆனால், அதை அனைத்தையும் மறந்து பிரேமலதா விஜயகாந்த் குமரகுருக்காக கள்ளக்குறிச்சியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதேபோன்று இவர்களுடன் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தேவதாஸ், முன்னாள் எம்பியாவார். இவர் பாஜகவுடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இத்தகைய பலம் வாய்ந்த மூன்று வேட்பாளர்களுடன் மக்களுடன் மட்டுமே கூட்டணி என நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஜெகதீஷ் பாண்டியனும் போட்டியிட்டு தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அதிமுக வேட்பாளர் குமரகுரு வெற்றி பெறுவார் என தெரிவித்து வந்தன. அப்படி இருந்தும் ஏன் வெற்றி பெறவில்லை என்ற விவாதம் தற்போது எழுந்து வருகிறது. முன்னதாக குமரகுரு பேசியபோது, “நமக்கு யார் ஓட்டு போடுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் பணம் கொடுங்கள்'' என்றார். இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதேபோல, தமிழக முதல்வர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை பொது மேடையில் அநாகரிமாக பேசிய வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி எங்கு பேசினாரோ, அதே இடத்தில் பொது மன்னிப்பும் கேட்டார். இதெல்லாம் குமரகுருவிற்கு வாக்கு குறைய காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
குமரகுரு, விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவானபோது, சிவி சண்முகத்தால் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருக்கும் குமரகுரு ஏன் தோல்வியைத் தழுவினார் என்பது விவாதமாகி வருகிறது. ஒருவேளை கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் உளுந்தூர்பேட்டை தொகுதி இணைக்கப்பட்டிருந்தால், நிச்சயமாக உளுந்தூர்பேட்டை தொகுதியில் பெருவாரியான ஓட்டுகள் குமரகுருவுக்கு விழுந்திருக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஆரம்பம் முதலே தபால் வாக்குகளில் இருந்து திமுக மலையரசனே முன்னிலையில் இருந்தார். 24 சுற்றுகள் முடிவில், திமுக வேட்பாளா் தே.மலையரசன் மொத்தம் 5,61,589 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் இரா.குமரகுரு 5,07,805 வாக்குகளும், பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் 71,290 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 73,652 வாக்குகளும் பெற்றனர்.
இதில், திமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளரைவிட 53,784 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இதையடுத்து, திமுக வேட்பாளர் தே.மலையரசனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷ்ரவன் குமாா் வழங்கினார். மேலும், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக, அதிமுக, வேட்பாளர்களைத் தவிர பாமக, நாதக கட்சிகள் உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
இதையும் படிங்க: மக்களவை தேர்தல் வெற்றியை தோல்வி போல் உணரும் பாஜக! 400 எதிர்பார்ப்பில் 32 பற்றாக்குறையானது எப்படி?