சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டைத் இன்று(பிப்.20) தாக்கல் செய்தார். இதில் "முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம்" புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மா: முதற்கனியான மா வில், தென்னாட்டு ரகங்களான பாதிரி, நீலம், பெங்களூரா, ருமானி, மல்கோவா, பங்கனப்பள்ளி போன்ற விருப்பத்திற்குரிய ரகங்களைக் கொண்டு 4,380 ஏக்கரிலும், ஏற்றுமதிக்கேற்ற ரகங்களான இமாம் பசந்த், ரத்தினகிரி அல்போன்ஸோ, சிந்து போன்ற ரகங்களைக் கொண்டு புதிதாக 250 ஏக்கரிலும் மாந்தோப்புகள் உருவாக்கப்படும்.
நன்னெறி வேளாண் நடைமுறை, உற்பத்தி முதல் விற்பனை வரை ஒவ்வொரு நிலையிலும், ஏற்றுமதிக்குரிய வகையில் விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.
கவாத்து செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, 26 ஆயிரத்து 540 ஏக்கர் பரப்பிலான பழைய தோட்டங்களைப் புதுப்பித்து அதிக விளைச்சல் தரும் தோட்டங்களாக மாற்றிட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
மேலும், மா பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு வளர்ச்சி ஊக்கிகள், உயிர் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான செயல்விளக்கத்திடல்கள் 6,175 ஏக்கர் பரப்பிற்கு மானியத்தில் வழங்கப்படும். மாவிற்கான சிறப்புத் திட்டம் 27 கோடியே 48 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழை: உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழைக்கான தேவை அதிகரித்துள்ளதால் வாழை உற்பத்தியை அதிகரிக்க 5,220 ஏக்கரில் வாழை பரப்பு விரிவாக்கம் செய்யப்படும்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, குலைகொண்ட வாழைகள் காற்றில் விழுந்து சேதமடைவதைத் தடுக்கும் வகையில் 3,700 ஏக்கரில் கழிகளைக் கொண்டு முட்டுக்கொடுத்தல் மேற்கொள்ள மானியம் வழங்கப்படும்.
மேலும், சேதம், கறைகளற்ற தரமான வாழைத்தார்கள் உற்பத்தி செய்து அதிக விலை கிடைக்கப்பெறும் வகையில், வாழைத்தார் உறைகள் 4440 ஏக்கருக்கு வழங்கப்படும். வாழைக்கான சிறப்புத்திட்டம், 12 கோடியே 73 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பலா: கடந்த 2023-2024ஆம் ஆண்டில் 1,850 ஏக்கர் பரப்பில் செயல்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக, 2024- 2025ஆம் ஆண்டிலும், பலாவில் உள்ளூர் ரகங்கள் 620 ஏக்கரிலும், புதிய ரகங்கள் 620 ஏக்கரிலும் பரப்பு விரிவாக்கம் செய்யவும், பலா விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உரம், பூச்சி மேலாண்மைக்கான இடுபொருட்கள், பயிற்சிகள் வழங்கவும், பலா பதப்படுத்தும் கூடங்கள் அமைக்கவும், 1 கோடியே 14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" வேளாண் பட்ஜெட்டில் புதிதாக அறிமுகம்!