கரூர்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள ராக்கியம் ஜேஜே நகர் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் ராகவன் (24). இவர் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால், நண்பர்கள் முருகானந்தம் (27), தீபக் (21) ஆகிய இருவருடன் சேர்ந்து மாயனூர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, மூவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, ராகவன் மட்டும் திடீரென நீரில் மூழ்கிக் காணாமல் போய் உள்ளார். இதனையடுத்து, அவரது நண்பர்கள் இருவரும், இது குறித்து மாயனூர் போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் கரூர் தீயணைப்பு படை துணை அலுவலர் திருமுருகன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் மாலை ராகவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மாலை 6 மணிக்கு மேல் இருட்டி விட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, நேற்று காலை மீண்டும் 7 மணி முதல் மாலை 6 மணி வரை தீயணைப்புப் படையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், ராகவனின் உடல் கிடைக்கவில்லை. இதனையடுத்து, இன்று காலை 7 மணியளவில் மூன்றாவது நாளாக தீயணைப்பு படை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேர தீவிர தேடுதலுக்குப் பிறகு காலை 9 மணி அளவில் ராகவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனைக் கண்ட ராகவனின் உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: காதல் திருமணம்.. 2 ஆண்டு கழித்து பழிதீர்த்த பெண் வீட்டார்.. ஓசூர் இளைஞர் கொலையில் அதிரும் பின்னணி!