சென்னை: பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மே 12ஆம் தேதி குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். வழக்கமான நடைமுறைப்படி சவுக்கு சங்கரின் தாய் தாக்கல் செய்த மனுவுக்கு அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
ஆனால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். அவசரமாக இறுதி விசாரணைக்கு எடுத்தது ஏன் என்றும் நீதிபதி சுவாமிநாதன் விளக்கம் அளித்தார். அதில், அதிகாரம் மிக்க நபர்கள் இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் பேசி அவசரமாக வழக்கை விசாரிக்கக் கூடாது எனக் கூறினர்.
இந்த வழக்கில் அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஒத்தி வைத்தால், அந்த நபர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்து விடுவார்கள் என்பதால், அவசரமாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக நீதிபதி சுவாமிநாதன் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை தொடர்பு கொண்ட இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், நீதிபதி சுவாமிநாதன், அந்த நபர்கள் யார் என்பதை வெளிப்படுத்தாததால், அவர்களை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.