திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டப் பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்வதாக எழுந்த புகாரில், முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்பட காவல்துறையினர் 14 பேர் மீது சிபிசிஐடி போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா உயர்மட்ட விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இதனிடையே புகாருக்குள்ளான ஏஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சமீபத்தில் அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதும் நடந்தது. இந்த நிலையில், நேற்று நெல்லையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில், வழக்கறிஞர் ஹென்றி திபென் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ஹென்றி திபென் , "நெல்லையில் சித்திரவதைக்கு எதிராக கூட்டு இயக்கம் எடுத்திருக்கக் கூடிய நடவடிக்கைகள் மற்றும் செய்தியாளர்கள் தொடர்ந்து எடுத்திருக்கக் கூடிய செய்திகளின் விளைவாக, எந்த செய்தி வெறும் செய்தியாக போயிருக்குமோ, அந்த செய்தி வழக்காக மாறி, குற்றவாளியாக கருதப்பட்ட பல்வீர் சிங் நீதிமன்றத்தில் நிற்கக்கூடிய முதற்கட்ட வெற்றியை நாம் காண்கின்றோம். இதில் தாமதம் இருக்கலாம், பல குறைகள் இருக்கலாம். ஆனால், பல்வீர் சிங் ஒரு குற்றவாளியாக நிற்கிறார் என்றால், அதில் பலரது போராட்டம் உண்டு. அதிலும் பத்திரிகையாளர்களது பங்கு மிக முக்கியமானது.
இந்த வழக்கு முழுமையான நீதியை நோக்கி இன்னும் செல்லவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்த நேரத்தில் வெளியே பேசிக் கொண்டிருக்கின்றோம் என்ற குற்றத்திற்கு ஆளாகக்கூடாது என்ற காரணத்தால் பேசாமல் இருந்தேன். முதலில் அமுதா ஐஏஎஸ்-இன் முழு அறிக்கையை கொடுங்கள் எனக் கேட்டோம். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அவர்களது முதற்கட்ட அறிக்கையை வெளிக் கொண்டு வந்தனர்.
அந்த முதற்கட்ட அறிக்கையைப் பெற, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பான அறிக்கை, சேரன்மாதேவி சப்கலெக்டர் நடத்திய விசாரணை அறிக்கை உள்ளிட்ட 3 அறிக்கையையும் கொடுங்கள் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அந்த வழக்கின் வழக்கறிஞரான என்னிடம் தர சிபிசிஐடி விரும்பவில்லை. மனுதாரரிடமும் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், அதனை மனுதாரரின் தாயாரிடம் கொடுத்துள்ளனர்.
அதில் ஏப்ரல் 19, 2023 என தேதியிட்டுள்ளது. இது ஒரு இடைக்கால அறிக்கை என அதிலே உள்ளது. அதாவது முதற்கட்ட அறிக்கை, இதில் பல இணைப்புகளை குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அது எங்களிடம் கொடுக்கப்படவில்லை. இந்த அறிக்கையை வெளியிடக்கூடாது என அமுதா ஐஏஎஸையும், சிபிசிஐடியையும் யார் தடை செய்கிறார் என தெரியவில்லை. தயவுசெய்து வெளிப்படையாக அமுதா ஐஏஎஸ்-இன் முழு அறிக்கையை கொடுங்கள். எங்களிடம் உள்ளது, சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட முதற்கட்ட அறிக்கை.
அதற்கு பின்பு பல நிலைகளில், பல அறிக்கை இருக்கும். பலருடைய வாக்குமூலம் இருக்கும். அதைத் தர வேண்டிய பொறுப்பு அமுதா ஐஏஎஸ்-க்கானது. தற்போது அவர் ஹோம் செகரட்டரியாக உள்ளார். வெளிப்படையாக கேட்கிறோம், முழு அறிக்கையை வெளிப்படுத்துங்கள் அல்லது உங்களை தடுப்பது யார் என்று தெரிய வையுங்கள். சேரன்மாதேவி சப் கலெக்டருடைய 3 அறிக்கைகளையும் வெளிப்படுத்தாமல் வைத்திருக்கிறார். அந்த அறிக்கையும் வெளி வந்தால்தான், நீதிமன்றத்தில் நடக்கக் கூடிய வழக்கின் உண்மையைப் பேச முடியும்.
எஸ்சி வகுப்பைச் சார்ந்த குற்றவாளிகளை எஸ்சிஎஸ்டி வன்கொடுமைச் சட்டத்தில், எஸ்சி எஸ்டி நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது. பல்வீர் சிங் எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர், இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த வழக்கில் சேர்த்த குற்றவாளிகளை எல்லாம் விட்டுவிட்டு, இந்த அறிக்கையில் இடம் பெறாத 2 பேரை அழைத்து வந்து, அந்த வழக்கில் வெறும் பல்வீர் சிங் உள்பட 3 பேரும் எஸ்சி வகுப்பைச் சார்ந்தவர்கள் எனக் கொண்டு வந்து, எஸ்சி எஸ்டி நீதிமன்றத்திற்கு அப்பால் கொண்டு வந்துள்ளனர் என்பது. இதைத்தான், சிபிசிஐடி செய்துள்ளது என்பது வருத்தத்துக்குறியது.
சாத்தான்குளம் வழக்கு போல், இந்த வழக்கிலும் மருத்துவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், அமுதா அறிக்கைகள் மருத்துவர் ஜெய்சங்கர் காயங்களை முறையாக பதிவு செய்யவில்லை என கூறி உள்ளார். இளையராஜா மற்றும் ஜெய்சங்கர் இருவரும் காயங்களை குறிப்பிடாமல் அனுப்பி உள்ளனர். அவர்களை இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும். இந்த வழக்கில் மேல்விசாரணை துவங்க வேண்டும். அவர்களாக தானாக முன்வந்து அறிக்கை கொடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
மேலும், காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வரை கொடுக்கவில்லை. தென் மண்டல புதிய ஐஜி கண்ணன் மற்றும் சிபிசிஐடி காவல்துறை அளித்துள்ள விவரத்தில், இருவரும் முரண்பாடான தகவலை தெரிவித்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் எந்த பணி செய்தாலும், அது திருட்டுத்தனமாக இருக்கக் கூடாது என்பதுதான் உச்ச நீதிமன்றம் கூறுகிறது. அமுதா ஐஏஎஸ் அறிக்கையை அரசு கொடுக்க வேண்டும் என கேட்டு இருக்கிறோம், இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்" என தெரிவித்தார்.