கோயம்புத்தூர்: குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (Citizenship Amendment act) 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து, கரோனா தொற்று பரவியதால், அந்த மசோதா குறித்து மத்திய அரசு எதுவும் பேசவில்லை.
இந்நிலையில் சிஏஏ மசோதா நிறைவேற்றப்பட்டதாக பிரதமர் அறிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக இந்த மசோதா குறித்து மத்திய அரசு எதுவும் பேசாத நிலையில், தற்பொழுது தேர்தல் வரும் நேரத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக கூறியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என பலரும் தெரிவித்து வருகின்றனர். ஏன் சிஏஏ மசோதவை எதிர்க்கின்றோம் என இஸ்லாமிய மக்கள் அவர்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய அப்துல் ஹக்கிம், " சிஏஏ அறிவிப்பு பொதுமக்களிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதன் மூலம் அனைவரும் மதத்தின் ரீதியாக பிரிவார்கள். அண்டை நாட்டினர் வரக்கூடாது என்று கூறுவதற்கு இவர்கள் யார்?. ஒரு காலத்தில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அனைத்தும் ஒரே நாடாக இருந்தது.
சில காரணங்களுக்காக பிரிந்து சென்றாலும் அவர்களும் நம் சகோதரர்கள் தான். மேலும், இஸ்லாமியர்களை தனிமைப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதனை கொண்டு வருகின்றனர். அதிமுகவும் பாமகவும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்காது. ஆனால் அவர்கள் சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும், சுயநலத்திற்காகவும் மத்திய அரசு சொல்வதை கண்மூடித்தனமாக தலையாட்டிக் கொண்டு துரோகத்தை இழைத்து விட்டது.
ஆனால் இப்பொழுது வந்து அது பற்றி தெரியாது என்று கூறுகிறார்கள். அதிமுகவினர் எடுத்த முடிவால் தற்பொழுது பாதிக்கப்படுவது இஸ்லாமிய மக்கள் தான். கடந்த முறை இந்த சட்டம் கொண்டு வரும்பொழுது எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பல்வேறு புகார்கள் போடப்பட்டது. தற்பொழுது வரை அது முழுமையாக நீக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து அப்துல் ரஹ்மான் கூறுகையில், "4 வருடங்கள் கழித்து நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்பொழுது இந்த சட்டம் நடைமுறைக்கு வருவது என மத்திய அரசு தெரிவித்திருப்பது திட்டமிட்ட தேர்தல் நாடகம். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக சந்தி சிரிக்கப் போகிறது என்ற காரணத்தினால், அதை திசை திருப்பக் கூடிய நோக்கத்தோடு இதனைத் தெரிவித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது என்று கூறிய ஒரு சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது என்று கூறியது முட்டாள்தனம். மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக திமுக கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகள் வலுவான குரலை எழுப்ப வேண்டும்" எனவும் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து இஸ்லாமிய பெண் ஆசிரியர் (அரபு மொழி ஆசிரியர்) சாஹிரா பானு சபீக் கூறுகையில், "இந்த CAA தேவையில்லாத ஒரு விஷயம். இதன் மூலம் அடுத்ததாக NRC கொண்டுவர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். இஸ்லாமியர்களும் இந்த மண்ணுக்காக ரத்தம் சிந்தி தியாகம் செய்தவர்கள். ஆனால் இவர்கள் இஸ்லாமியர்களை தனியாகப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இதனை செய்கின்றனர்.
2019ஆம் ஆண்டு இந்த சட்ட மசோதா கொண்டு வருவதாகக் கூறப்பட்ட நிலையில், குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை போராட்டம் நடத்தினோம். தற்போது 4 ஆண்டுகள் கழித்துத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் அந்த சட்டத்தைக் கொண்டு வருவது தேர்தல் நாடகம். இந்தியாவில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் எங்களை மதரீதியாகப் பிரிக்கின்றனர்.
பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் எங்களை, ஆவணங்கள் இல்லாததால் குடியுரிமை இல்லை என்று கூறுவதும், அதே சமயம் ஆவணங்கள் இருப்பதால் இந்த நாட்டின் மீது அக்கறை இல்லாமல், தீவிரவாத குணத்துடன் செயல்படுபவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் எனக் கூறுவதும் கேள்விக்குறியாக இருக்கிறது.
மேலும் இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகளை எல்லாம் எந்த இடத்தில் வைத்துப் பார்ப்பது என்றே தெரியவில்லை. அதிமுக ஒரு காலத்தில் இதனை ஆதரித்தது, தற்பொழுது எதிர்க்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும் ஒரு காலத்தில் திமுக இதனைக் கடுமையாக எதிர்த்த நிலையில் தற்போது மௌனமாக இருக்கிறது.
நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நல்லது செய்ய வேண்டும் என்றுதான் பொறுப்புகளை அளித்து ஒருவரைப் பதவியில் அமர்த்துகிறோம். ஆனால் அதனைச் சீர்குலைக்கின்ற வகையில் பதவியில் இருப்பவர்கள் செய்கின்ற பொழுது அவர்களை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. இவர்களெல்லாம் நேரத்திற்குத் தகுந்தார் போல் மாறும் பச்சோந்திகளாக இருக்கின்றனர்" என விமர்சித்தார்.
இது குறித்து வழக்கறிஞர் சண்முகம் கூறுகையில், "சிஏஏ சட்டத்தால் பாதுகாப்பு இல்லை என்று ஒரு அச்சம் மக்களிடையே நிலவுகிறது. இந்த திட்டம் கூறுவது ஒரு பக்கத்தில் முடிந்து விடும். ஏற்கனவே இருந்த குடியுரிமை சட்டத்தில் சில திருத்தங்களை மட்டுமே மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
குறிப்பாக பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இந்த 3 இஸ்லாமிய நாடுகளிலும் மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டோ அல்லது துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்திலோ அங்கு சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின் மதத்தினர், சீக்கியர்கள், பார்சி, புத்த மதத்தினர் ஆகியோர் 2014 டிசம்பர் 31க்கு முன்பு இந்தியா வந்திருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுகிறது.
அவர்கள் மீது ஏதேனும் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவை கைவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சட்டம் இந்திய இஸ்லாமியர்களைக் கட்டுப்படுத்தாது. அவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே இந்திய குடிமக்கள் தான். அவர்களுக்கு அரசியல் சாசன பாதுகாப்பும் உள்ளது. அந்த மூன்று நாடுகளில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர்கள் எனக் கூறும் மதத்தினர்களில் ஒருவர்களான கிறிஸ்தவர்கள், இந்தியாவில் மிகப் பெரும்பான்மையாக இருப்பவர்கள்.
அவர்களுக்கு இது பலனளிக்கும். அதுமட்டுமின்றி இதர ஐந்து மதத்தினருக்கும் பலன் அளிக்கும். மத்திய அரசு கொண்டு வந்ததை மாநில அரசுகள் தடுக்க முடியாது. குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் கிடையாது. இருப்பினும் மக்களுக்கு வரக்கூடிய அச்சத்தை தெளிவுபடுத்த வேண்டிய கடமை ஆட்சியாளர்களிடம் தான் உள்ளது. ஆனால் அவர்கள் இது குறித்து எந்த விவரங்களையும் சொல்ல மறுக்கிறார்கள். அதற்கு காரணம் அரசியல் தான்.
பல இடங்களில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்து ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் என பல ஆவணங்களை தயாரித்து இந்தியப் பிரஜைகளாகவே வாழ்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்திய பெண்களைத் திருமணம் செய்து கொண்டு இந்தியர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். ஏதேனும் குற்ற சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டு விசாரணை மேற்கொள்ளும் பொழுது தான் முழு விவரங்கள் தெரிய வருகிறது.
இதையெல்லாம் வரைமுறைப்படுத்தும் பொழுது தான் அரசாங்கத்தின் நிதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மக்களுக்குக் கொடுக்க முடியும். சில அரசியல் கட்சிகள் இதனை வேண்டாம் என்று கூறும் பொழுது பாதிப்பு கிறிஸ்தவர்களுக்குத் தான் ஏற்படும். பள்ளி வகுப்புகளிலேயே வாழ்வியல் சட்டங்களைப் பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் அப்பொழுதுதான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: இன்டர்போல் உதவியை நாடிய தமிழ்நாடு காவல்துறை