கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், ஏறத்தாழ 180க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கருணாபுரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனையிலும், மற்றவர்கள் சேலம், விழுப்புரம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 57 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். 148 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில், தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் கள்ளக்குறிச்சியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அறிக்கை அளிப்பதற்காக வந்துள்ளேன். இனியாவது, சாராயத்தை எந்தவகையிலும் அருந்தக் கூடாது என்று மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இந்த கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மீதம் உள்ள அனைவரும் உள்நோயாளிகளாக சிகிச்சைபெற்று குணமடைந்து வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சி பகுதியில் சாராயம் விற்பதற்கு அதிகாரிகள் துணையாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த தவறு நடக்க யார் ஆதரவாக இருந்தார்களோ அவர்களை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். அதைத் தவிர்த்து இந்த குற்ற நடவடிக்கையில் உடந்தையாக, ஆதரவாக இல்லாத அலுவலர்களை பணிநீக்கமோ, தண்டனை கொடுப்பதோ தகுந்த நடவடிக்கை அல்ல. ஆனால், இங்குள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு இதெல்லாம் தெரியும்.
'20 ஆண்டுகளாக சாராய விற்பனை?': இந்த பகுதியில் 20 ஆண்டுகளாக சாராயம் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. சாராயம் விற்பனை செய்தவருக்கு வேறு ஒரு நபர் மெத்தனால் வினியோகம் செய்துள்ளார். அதன்படி இங்கு கலப்படம் செய்யப்பட்ட சாராயம் விற்பனை செய்யவில்லை. மெத்தனாலை கலந்து கொடுத்ததாகத் தெரிகிறது. மேலும், கல்வராயன்மலையில் தயாரிக்கப்படும் சாராயம் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது வெளியூரில் இருந்து கிடைக்கின்ற சாராயம் என தெரிகிறது. இங்கு பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, அதை எப்படி சரி செய்து, அவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம், வேலை வாய்ப்பு, நிலம் ஆகியவை வழங்க ஆலோசிக்கப்படும். மெத்தனால் இவர்களுக்குக் கிடைக்காத பொருள், படிப்பறிவு இல்லாத இவர்களுக்கு மெத்தனால் கொண்டு வந்து கொடுத்து இவ்வளவு உயிரிழப்பை ஏற்படுத்தி இருப்பது ஒரு வகையான வன்கொடுமை. எனவே இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மாற்ற வேண்டும் என சிபிசிஐடியை கேட்டுக் கொள்கிறோம். வருகின்ற திங்கட்கிழமை (நாளை) எங்களது ஆணைய தலைவர் மூலம் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்" என்று ரவிவர்மன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் - திமுகவினர் தொடர்பை வெளிக்கொண்டு வரவே சிபிஐ விசாரணை' - அண்ணாமலை