கோயம்புத்தூர்: வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய கட்சி தலைவர்கள், மாநில கட்சி தலைவர்கள், மற்றும் நடிகர் நடிகைகள், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் அரசியல் களம் பரபரப்பாக காணப்பட்டுவருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடும் நிலையில், அவர்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் இன்று அதிமுக சார்பாக பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை விந்தியா பேசுகையில், ஒரு திரைப்படத்தில் வடிவேல், 'நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்' என கத்துவது போல, நான் தான் தலைவர் என கூறிக்கொண்டு ஒரு ஆட்டுக்குட்டி சுற்றி கொண்டு உள்ளது.
திருவிழா முடிந்தவுடன் ஆடு பலி கொடுப்பது வழக்கம், அந்த ஆட்டை வளர்த்தவனே பலி கொடுப்பது தான் வரலாறு, ஆட்டுக்குட்டி எங்கு வேண்டுமானாலும் சிங்கம் வேஷம் போடலாம், ஆனால் இந்த தேர்தல் முடிந்தவுடன் ஆட்டுக் குட்டி மட்டன் பிரியாணி ஆவது மட்டும் உறுதி", என நடிகை விந்தியா பேசியுள்ளார். அண்ணாமலையை அவர் இவ்வாறு சாடியுள்ள வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.