திருப்பூர்: நடிகை நமீதா நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருமுருகன் பூண்டி பகுதியில் வைத்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட கட்சிகள் யாராவது மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார்களா, மத்திய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளது.
வீடு மட்டுமல்லாமல் குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது. திமுக 234 தொகுதிகளில் மக்களைச் சந்தித்து அவர்கள் தேவைகளை கேட்டுள்ளதா? ஆனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் அடிப்படைத் தேவைகளை கேட்டு பூர்த்தி செய்து வருகிறார். திமுக மக்களை பிரித்து ஆளும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஆனால், திமுகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. காட்டில் யானையை எதிர்க்க சிறு சிறு மிருகங்கள் எவ்வாறு ஒன்று சேருமோ, அது போல இந்தியா கூட்டணியில் சிறு கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது. இருப்பினும், அவர்களால் மோடி என்னும் பெரும் மனிதரை தோற்கடிக்க முடியாது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி, திறமையான போட்டியாளர் உருவாவதாக நினைக்கிறோம். கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார்” என கூறினார்.
இதையும் படிங்க: திருப்பூரில் காரும், அரசு பேருந்தும் மோதி கோர விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி - TIRUPPUR ACCIDENT