சென்னை : சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், மருத்துவர் ஸ்ருதி கிஷன் முன்னெடுப்பில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட பெண்களை ஊக்குவிக்கும் பொருட்டும் ஒப்பனை துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும் விருது மற்றும் நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோயிலுக்குச் சென்று கடவுள்களை பார்ப்பதை விட ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு அடைந்தவர்களை பார்ப்பது அபூர்வமான விஷயம். நமது நாட்டிலேயே ஆசிட் வீச்சில் நிறைய பேர் பாதிக்கப்பட்டு அந்த பாதிப்பில் இருந்து வெளியே வராமல் இருக்கிறார்கள்.
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணாடி கூட பார்க்க முடியாமல் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளியே வரவேண்டும். மனதில் இருந்து ஒருவருக்கு நல்லது நினைப்பது தான் அழகு. இதுபோன்ற அழகானவர்களுக்கு விருது கொடுப்பது தான் பெருமை.
தேசிய விருதுகளை விட இதுபோன்ற விருதுகள் தான் எனக்கு முக்கியம். இதுபோன்ற விருதுகள் மேல்தான் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆசிட் பாதிப்புக்கு பிறகு பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் பெரிய அவஸ்தைக்குள்ளாகிறார்கள். நடிகராக இருந்ததால் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட இது போன்ற பெண்களுக்கு மத்தியில் நிற்க வாய்ப்பு கிடைத்தது.
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட டெல்லியில் இருந்து வந்த பெண் என்னோடு நடிக்க வேண்டும் என கேட்டிருந்தார் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் அவருடன் நடிப்பேன். சினிமா என்பது கடல் மாதிரி அதில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் அதற்கென்று தனி வரையறை எதுவும் கிடையாது.
இதையும் படிங்க : 100 அடி கொடி.. தவெக நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு.. திருத்தணி கோயிலில் நடந்தது என்ன?
விஜய் மாநாடு: வாக்காளர் என்ற முறையில், தவெக மாநாட்டில் அழைப்பு விடுக்காமலே கலந்து கொள்வேன். மாநாட்டில் மக்களுக்கு என்ன சொல்லப் போகிறார்? இப்ப இருக்கக்கூடிய அரசியல்வாதிகளை விட இவர் என்ன நல்லது செய்யப் போகிறார்? என்பதை மக்கள் மத்தியில் ஓரமாக நின்று பார்ப்பேன். டிவியில் பார்ப்பதைவிட நேரில் பார்ப்பது தான் நல்லது.
தமிழக வெற்றிக் கழகத்தில் விஷால் இணைவாரா? : இதற்கு இப்போது என்னால் பதில் கூற முடியாது. முதலில் விஜய் மாநாடு நடத்தட்டும். விஜய் முதல் அடி வைக்கட்டும், அவர் என்ன செய்யப் போகிறார்? அவருடைய செயல்பாடுகள் என்ன? என்ன நல்லது செய்யப் போகிறார்? என்பதை பொறுத்துதான் கட்சியில் இணைவேனா குறித்து முடிவெடுக்க முடியும். தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. சமூகப்பணி செய்பவர்கள் அனைவருமே அரசியல்வாதிகள் தான். நானும் ஒரு அரசியல்வாதி தான்.
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் : ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் குளறுபடிகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு அவங்கவங்க பிரச்னை, அவங்கவங்க கருத்து, அவங்கங்க சர்ச்சை, அவரவர் திணிப்பு அதைப்பற்றி நான் சொல்ல விரும்பவில்லை" என்று பதிலளித்தார் விஷால்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்