விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்காக அனுமதி கேட்டு கடந்த 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்த நிலையில் காவல்துறை சார்பில் மாநாடு நடத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு 21 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதற்கான பதிலினை இன்று விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டிஎஸ்பி சுரேஷிடம் வழங்கினர். உடன் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், “ஐந்து நாட்களுக்குள் பதில் கேட்டிருந்தார்கள். அதற்கான பதிலளித்திருக்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில் மாநாடு நடத்துவது தொடர்பாக பதில் அளிப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் பின்னரே கட்சியின் தலைவர் விஜய், மாநாடு குறித்த அறிவிப்பினை வெளியிடுவார்” என்றார்.
மாநாடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகள்:
- தாங்கள் கொடுத்துள்ள பார்வையில் கண்ட 28.08.2024 ஆம் தேதியிட்ட மனுவில் மாநாடு நடைபெறும் நேரம் குறிப்பிடப்படவில்லை, எனவே, மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடிக்கப்படும்?.
- மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விபரம்?
- தாங்கள் 23.09.2024 அன்று மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? யார் அவர்களிடம் முறையாக அனுமதி பெற்றது?
- மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்களின் பெயர் பட்டியல்.
- மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை நாற்காலிகள் மேடையில் போடப்பட உள்ளன? மேடையில் பேசவுள்ள நபர்களின் பெயர் விபரம்..
- மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு எவ்வளவு நாற்காலிகள் போடப்படவுள்ளன.
- மாநாட்டில் வைக்கப்படவுள்ள பேனர்கள் எண்ணிக்கை மற்றும் அலங்கார வளைவுகளின் விபரம்.
- மாநாடு ஏற்பாடு செய்யும் நபர்கள் மற்றும் பந்தல், ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்ததாரர்கள் விபரம்.
- மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம்.
- மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்கள் எந்தெந்த மாவட்டத்திலிருந்து வருவார்கள்? யாருடை தலைமையில் வருவார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம் மற்றும் அவர்கள் வரும் வாகனங்களின் வகை மற்றும் எண்ணிக்கை? (இருச்சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகள் விபரம்).
- மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்படுள்ளதா? அந்த இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?
- மாநாட்டில் வாகனங்கள் நிறுத்துமிடங்களில் பாதுகாப்பு பணிக்கு தனியார் பாதுகாவலர்கள் அல்லது தன்னார்வாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா? அவர்களின் பெயர் விபரம் மற்றும் சீருடை விபரம்?
- மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், குழந்தை மற்றும் முதியவர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவுள்ள விபரம்.
- மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு செய்யப்படவுள்ள அடிப்படை வசதிகளின் விபரம் மற்றும் வழங்கப்படும் குடிதண்ணீர், பாட்டில் வகையா? அல்லது தண்ணீர் டேங்க் மூலமாகவா? (குடிநீர், கழிப்பிடம்... இதர.,)
- மாநாட்டிற்கு வரும் நபர்களுக்கு உணவு, பொட்டலங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதா? அல்லது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே சமையற்கூடம் மூலம் சமைத்து விநியோகிக்கப்படவுள்ளதா.?
- மாநாட்டில் தீவிபத்து தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு செய்யப்படவுள்ள விபரம்..
- மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதா அவ்வாறு செய்யப்பட இருப்பின் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸின் விபரங்கள்..
- மாநாட்டில் கலந்து கொள்ள வரும் நபர்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித் தடங்கள் எத்தனை?
- கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நபர்கள் விழா மேடைக்கு செல்லும் வழித்தடம் பற்றிய விபரம்..
- மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் ஒவ்வொரு இடத்திற்கு உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித் தடங்கள் எத்தனை?
- மாநாட்டிற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது? அதற்கான அனுமதி விபரம். என 21 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மாநாடு நடத்துவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலையை காரணங்காட்டி தமிழக அரசின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டால், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இதே வி. சாலை பகுதியில் தான் இந்தியா கூட்டணி சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்ற, விழுப்புரம் மற்றும் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிமுக மாநாடு நடத்தப்பட்டது என்கிற விவாதம் எழுப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'லியோ'வை விஞ்சியதா 'கோட்'? முதல் நாள் வசூல் எவ்வளவு?