கரூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகர் சரத்குமார் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி உப்பிடமங்கலம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வெறும் 29 பைசா இல்ல: அப்போது பேசிய அவர், “ நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் பெறாமல் மக்கள் வாக்களிக்க வேண்டும். இத்தொகுதியில் போட்டியிடும், செந்தில்நாதன் தான் கதாநாயகன். நான் கதாநாயகனுடன் உடன் வரும் துணை நடிகர். இந்தியாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைய அனைவரும், தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அமைச்சர் உதயநிதி மத்திய அரசு 29 காசு மட்டுமே கொடுப்பதாகக் கூறுகிறார்.
அது வெறும் 29 காசு மட்டுமல்ல. 1 இலட்சத்து 58 ஆயிரத்து 145 கோடி ரூபாய். அந்த பணம் எங்கே சென்றது. அந்த பணத்தை எப்படி பயன்படுத்தினார்கள் என கணக்குக் காட்டவேண்டும். காட்டினீர்களா?. அந்த பணத்தை அள்ளி கொடுக்கிறீர்கள். ஆயிரம் ரூபாய் கொடுக்கிறீர்கள். நல்ல விஷயம் தான். நாங்கள் கொடுக்கும் 1000 ரூபாயில் தான் பெண்கள் பவுடர் போட்டுக் கொண்டு பளபளப்பாக வருகிறீர்கள் என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். அமைச்சர் பொன்முடி ஓசி பஸ் என்கிறார்.
கேள்வி கேட்க முடியாத சூழல்: இதையெல்லாம் கேட்கிறபோது தனி மனிதனாக எனக்குக் கோபம் வருகிறது. பணம் பெற்றுக் கொண்டு வாக்களித்தார்கள் என்பதற்காக மக்களை இப்படி திமுகவின் மூத்த நிர்வாகிகள் மக்களை ஏளனமாகப் பேசுகிறார்கள். இதே நிலைதான் இப்போது நடைபெற உள்ள தேர்தலிலும். வாக்கு செலுத்தப் பணம் பெற்றால், வெங்காயம் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏற்பட்டால் மக்கள் பிரதிநிதியிடம் கேள்வி கேட்க முடியாது.
நாட்டில் தற்பொழுது கேள்வி கேட்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தேச ஒற்றுமை, தேச பாதுகாப்பு, தேசத்தின் வளர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நம்மைச் சுற்றி எதிரிகள் மட்டுமே களத்தில் உள்ளனர். பாஜக தலைவர் அண்ணாமலையைப் பார்த்து தயாநிதி ஜோக்கர் என்று கூறுகிறார். யார் ஜோக்கர் போலச் சிரிக்கிறார் என்பது தயாநிதிக்கே தெரியும். ஊட்டியில் உள்ள தொகுதியில் நிற்கும் திமுகவைச் சேர்ந்த ராசா, பாஜக எல்.முருகனை எதிர்த்து நிற்கிறார்.
உதயநிதியின் உழைப்பு என்ன?: ராசா 2ஜி ஊழலுக்குப் பெயர் பெற்றவர். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் பணத்தை 500 ரூபாய் நோட்டுகளாகச் சாலையில் போட்டால், இங்கிருந்து சென்னை வரை கீழே கிடக்கும். அந்த அளவுக்குக் கணக்கிட முடியாத அளவுக்குப் பெருந்தொகையை ஊழல் செய்தவர் ராசா. சினிமாத் துறையில் 40 ஆண்டுகளைக் கடந்து விட்டேன். 20 கோடி, 30 கோடி, 40 கோடி என சொத்து வைத்திருப்பவர்கள் திமுகவில் உள்ளவர்கள்.
ஆனால் மக்களிடம் இதுவரை எந்த முன்னேற்றமும் பொருளாதார ரீதியாக ஏற்படவில்லை. அதற்காகத்தான் பிரதமர் மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தனது கடுமையான உழைப்பால் மூன்று முறை குஜராத்தில் முதலமைச்சர், இரண்டு முறை பிரதமர். இவரைப் பார்த்து அமைச்சர் உதயநிதி, 29 பைசா என்று கூறுகிறார். அமைச்சர் உதயநிதியைப் பார்த்துக் கேட்கின்றேன். உங்களுடைய உழைப்பு என்ன என்று கூற முடியுமா?.
தொழில் வளத்தைப் பெருக்க மோடியால் மட்டுமே முடியும்: 2026ல் நிச்சயம் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். அமைச்சர் உதயநிதி வைத்துள்ள செங்கல் ஒன்றால், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் ஒன்றும் கீழே விழுந்து விடாது. உழைப்பால் உயர்ந்த பிரதமரைப் பார்த்து 29 பைசா பிரதமர் என நையாண்டி செய்வதை உதயநிதியை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் தொழில் வளத்தைப் பெருக்குவதற்கு மோடியால் மட்டுமே முடியும் என்பதை நீங்கள் நம்பி வாக்களிக்க வேண்டும்.
உழைப்புக்கேற்ற ஊதியம் ஊதியத்திற்கு ஏற்ற வேலை பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே வழங்க முடியும். பாஜக எந்த பிரிவினை அரசியலும் மேற்கொள்ளவில்லை. இங்குள்ள திராவிட கட்சிகள் மக்களை குழப்பி வருகின்றனர். தொடர்ந்து கரூர் வெங்கமேடு எம்ஜிஆர் சிலை எதிரில் பிரச்சாரம் செய்து நடிகர் சரத்குமார், “தமிழகம், புதுச்சேரியில் 40 இடங்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்றால் அதற்கு கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெறவேண்டும்.
பாஜக தலைமையிலான அரசில் அமைச்சராக வேண்டும். இனி கரூர் அமைச்சர் அவர் தான். 3வது முறையாக முறையாக மோடி பிரதமராக வேண்டும். நாட்டாமை திரைப்படத்தில் நான் தீர்ப்பு வழங்கியதைப் போல உங்களுக்குக் கூறிச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்குத் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று பேசினார்
அதே போல், கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரவக்குறிச்சி ஷா கார்னர், கரூர் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்துப் பேசினார்.
திமுகவிற்கு தக்க பாடம் புகட்டும் நேரம்: அப்போது பேசிய அவர், “பத்து ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டது பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான மோடி அரசுதான். இந்த தேர்தல் மீண்டும் மத்தியில் யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல். திராவிட மாடல் என்று கூறி, திமுக குடும்பத்திற்கு நலன் ஒன்றே குறிக்கோளாகச் செயல்பட்டு, தமிழக மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசுக்குத் தக்க பாடம் புகட்டும் நேரம் இந்த தேர்தல்.
இது மாநிலத்துக்கு நடைபெறும் தேர்தல் அல்ல மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல். பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி பத்தாண்டுகளாக எப்படி இருந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். அது மூன்றாவது முறையாகத் தொடர வேண்டுமென்றால், இம்முறை தாமரை சின்னத்தில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் அதிகப்படியான வாக்குகள் தாமரை சின்னத்தில் பதிவாக வேண்டும்” என்று பேசினார்.
முன்னதாக மாயனூர் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகவல்லி ரகுபதி தாமரைப் பூக்களை மாலையாக அணிவித்து வானதி சீனிவாசனுக்கு வரவேற்பு அளித்தார். கரூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு, பாஜக நட்சத்திர பேச்சாளர்களான நடிகர் சரத்குமார், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் ஒரே நாளில் கரூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து பிரச்சாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர்.
இதையும் படிங்க: "உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியின் கால் தூசுக்கு வரமாட்டார்" - நடிகர் சரத்குமார் காட்டம்! - Lok Sabha Election 2024