சென்னை: பீப்புல் மீடியா ஃபேக்டரி - விஷ்வ பிரசாத் தயாரித்து இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் வடக்குப்பட்டி ராமசாமி. காமெடி படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது.
இந்த நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றி விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் இன்று(பிப்.10) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சந்தானம், நிழல்கள் ரவி, ரவி மரியா, எம்.எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ், சேஷூ, நடிகைகள் மேகா ஆகாஷ், ஜாக்லின், இயக்குநர் கார்த்திக் யோகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "இந்தப் படத்திற்கு நல்ல பாசிட்டிவாக ரிவ்யூ வந்தது. எல்லாரும் படத்தை கொண்டாடுகிறார்கள். இந்தப் படத்தில் உடன் நடித்தவர்கள் என் எல்லா படங்களிலும் வித்தியாசமாக பயணம் செய்வார்கள். ஆனால் ஹீரோயின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா என்று இயக்குநரை தான் கேட்க வேண்டும்.
மேலும் தெற்குப்பட்டி தென்ராசு என்று இன்னொரு படம் யோசித்து வைத்திருந்தோம். மக்கள் சினிமாவை ரசிக்க வேண்டும். ஹீரோயின் மேகா ஆகாஷ் உடன் அதிக ரொமான்ஸ் காட்சிகள் இல்லாதது வருத்தமாக இல்லை" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "ஹாரர் காமெடி என்பதை விட சோசியல் காமெடி பண்ணுவது மற்றும் அதை கையாள்வது என்பது மிகவும் கடினம். பிக்பாஸில் இருந்து ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பொருளை வாங்கி வந்திருக்கிறான் கூல் சுரேஷ்" என்று கலாய்க்கும் தோரணையில் நகைத்தார்.
தொடர்ந்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் விலகியது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "சில விஷயங்கள் பிரச்சினையாக, அரசியலாக மாறுவதால் அதை தவிர்த்து விடுவது நல்லது. இன்றைக்கு மக்களிடம் இறுக்கம், சோகம் தான் இருக்கிறது. என் நோக்கம் சுற்றி உள்ளவர்களை சந்தோஷமாக வைக்க வேண்டும் என்பது தான். என் படங்களில் சிரிக்கலாம், சந்தோஷமாக இருக்கலாம்" என்றார்.
சந்தானத்தின் படத்தில் மற்றவர்களுக்கும் இடம் கொடுப்பது குறித்த கேள்விக்கு, "ஒரு காமெடி என்றால் அதற்கு மற்றவர்களுக்கும் இடம் தர வேண்டும். இல்லா விட்டால் சண்டை வந்து விடும். என்னுடைய ரோலை நான் பண்ணிவிட்டு, மற்றவர்களுக்கும் வாய்பளிக்க வேண்டும். வடக்குப்பட்டி ராமசாமி பெயர் வைக்க காரணம், கவுண்டமணி டயலாக் அது. நான் அவர் ரசிகன். இயக்குநரும் அவரின் ரசிகர்தான். அடுத்ததாக நானும் ஆர்யாவும் நடிக்கும் படத்திற்கும் கவுண்டமணி டயலாக் தான் டைட்டில்" என்றார்.
தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் சங்கி என்று ஒரு நடிகரை சொல்வது குறித்த கேள்விக்கு, "சங்கி - ஸ்கூல்ல நான் சங்கீதா என்ற பெண்ணை லவ் பண்ணினேன். அவரைக்கூட சங்கி சங்கின்னு தான் கூப்பிடுவேன். அதுக்காக அவர் சங்கி ஆகிவிடுவாரா?" என்று நகைப்புடன் பேசினார்.
மேலும் இந்த படம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என இரு தரப்பினரும் பார்க்கும் படமாக உள்ளது. படத்தின் கருத்து மத நம்பிக்கையை வைத்து பணத்தை சம்பாதிக்க கூடாது என்பதுதான். பின்னர் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதற்கு, எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது எனவே எனக்கு கடவுள் இருக்கிறார்" என பதிலளித்தார்.
இதையும் படிங்க: நோ பொலிடிக்கல் கொஸ்டின்ஸ்.. லோகேஷுடன் இணையும் ரஜினிகாந்த்.. ரஜினியின் பளீச் பதில்!