சென்னை: சென்னை நந்தனம் விரிவாக்கம் 7-ஆவது தெருவில் பிரபல நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் வீடு உள்ளது. அந்த வீட்டின் கீழ் தளத்தில் பார்த்திபனின் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்கள், மேலாளர்கள், உதவியாளர்கள் என பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பு சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பார்த்திபன் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது அலுவலக அறையில் கைப்பை ஒன்றில் 12 சவரன் தங்க நகைகள் வைத்திருந்ததாகவும், தற்போது நகையுடன் அந்த பை மாயமாகி உள்ளதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசார் அவரது அலுவலகத்தில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், அவரது அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த கிருஷ்ண காந்த் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாகக் கூறி வந்த நிலையில், கிருஷ்ண காந்த் நகைகளுடன் இருந்த பையை பார்த்திபன் இடம் திரும்ப ஒப்படைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'அமரன்' படத்திற்கு எதிர்ப்பு: திரையரங்கை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினர்!
இதையடுத்து தனது அலுவலகத்தில் பணிபுரிந்த கிருஷ்ண காந்த் வீட்டிலிருந்த நகையைக் கொண்டு வந்து கொடுத்து விட்டதாகவும், அதனால் அவர் மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என நேற்று (நவ.7) எழுத்துப்பூர்வமாகக் காவல் நிலையத்தில் பார்த்திபன் தெரிவித்ததாகவும், இதனால் கிருஷ்ண காந்தை அழைத்து எச்சரித்துவிட்டு அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்