தேனி: உலக பட்டினி தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தன்னார்வலர்கள் ஏழை எளிய மக்களுக்கு பசியைப் போக்கும் விதமாக உணவுகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பங்களாமேடு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பிரியாணி நிறுவனத்தின் சார்பில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி உணவை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தனியார் தொலைக்காட்சி நடிகர் KPY பாலா கலந்துகொண்டு, ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கினார். அப்போது நடிகர் பாலா உடன் மக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பாலா, "எனக்கு கிடைக்காத உதவி மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் சமூக சேவை செய்கிறேன்.
எனது சமூக சேவை விரிவடைவதைக் காட்டிலும், மக்கள் மனசு நிறைய வேண்டும்” என்றார். மேலும், “நான் என்னால் முடிந்த வரை தனியாக உதவி செய்து வருகிறேன், உன்னால் செய்ய முடியாத உதவி என்றால் என்னிடம் கேள் என நடிகர் லாரன்ஸ் கூறியுள்ளார். அப்போது இருவரும் இணைந்து உதவி செய்வோம்.
முன்பு சம்பாதித்த பணத்தை வைத்து பொதுமக்களுக்கு உதவி செய்தேன், தற்போது உதவி செய்வதற்காகவே அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. என்னையும் மதித்து பொதுமக்கள் மனுக்களைக் கொடுக்கிறார்கள், அதற்காகவாவது இன்னும் வேகமாக சம்பாதிக்க ஓட வேண்டும் எனத் தோன்றுகிறது" என கூறினார்.
இதையும் படிங்க: உடற்கூறியலில் நவீன எம்பார்மிங் முறை... தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை! - Embalming System