தென்காசி: வருகின்ற 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சார பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியக் கூட்டணியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீ குமார் போட்டியிடுகிறார். இந்த நிலையில், ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான கருணாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தென்காசி இலஞ்சி பகுதியில் பேசிய அவர், திமுகவைச் சேர்ந்த யாரும் தன்னை வற்புறுத்தி இங்கு அழைத்து வரவில்லை. பாஜக அரசின் நிர்வாக சீர்கேடால் தனக்குப் படுத்தால் தூக்கம் வரவில்லை, அதன் காரணமாகவே திமுகவை ஆதரித்துத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றேன்.
என்னை எல்.முருகன் போன்றோர் பாஜகவில் இணைவதற்கு அழைத்தார்கள். தன்னை பணம், பதவி உள்ளிட்டவற்றைத் தருவதாகக் கூறியும் நான் செல்லவில்லை. பாஜகவில் இருப்பவர்கள் பணத்திற்காகவும், பதவிக்காகவும் இருப்பவர்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அண்ணாமலை ஒரு ரவுடி. பாரதிய ஜனதா கட்சியில் ரவுடிகளுக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை ஐபிஎஸ் படித்துள்ளார். டிடிவி தினகரன் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருப்பது சுயநலத்திற்கான கூட்டணி. தன்னை தீகார் ஜெயிலில் வைத்தவர்களுடன் டிடிவி தினகரன் கூட்டணி வைத்திருப்பது சூழ்நிலைக்கான அரசியல் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீலகிரி: குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி, சிறுத்தை.. வைரலாகும் வீடியோ! - Nilgiris Leopard And Bear Video