கரூர்: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தங்கவேல், கரூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று (சனிக்கிழமை) காலை 6.30 மணியளவில் வீரராக்கியம் பகுதியில் அதிமுக கரூர் வேட்பாளர் எல்.தங்கவேல் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.
அதற்கான ஏற்பாடுகளை அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் செய்து இருந்தனர். பின்னர், 1 மணி நேரம் தாமதமாக பிரச்சாரம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி தட்டுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் கரூர் அதிமுக வேட்பாளருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துமனைக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது 10 ஆண்டுகளாக அதிமுகவில் செய்த சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், தாம்பூலத் தட்டுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பெண்களுக்கு, தலா 50 ரூபாயை அதிமுகவினர் வழங்கினர்.
அப்போது அங்குக் கூடியிருந்த பெண்கள், "எவ்வளவு சம்பாத்தித்து இருப்பாங்கா.. 2 மணி காத்திருந்ததற்கு வெறும் 50 ரூபாய்தானா? கூட 50 ரூபாய் கொடுத்த என்னவாம்" என முணுமுணுத்தது மட்டும் அல்லாமல். 50 ரூபாய் மட்டும் கொடுப்பதாக அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி தங்கவேலு உத்தரவின் பேரில், பறக்கும் தனிப்படை குழுவினர் வேட்பாளர்கள் செல்லும் இடங்களுக்கு கண்காணிப்பு கேமராக்களுடன் செல்கின்றனர். ஆனால், தேர்தல் பிரச்சாரங்களுக்கு, அதிக வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வருவது, உணவு பொட்டலங்கள் வழங்குவது, பணம் விநியோகம் செய்வது உள்ளிட்டவை குறித்து யாரும் கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பலாப்பழம் சின்னத்தில் போட்டி - மற்ற 4 ஓபிஎஸ் பெற்ற சின்னங்கள் என்ன?