கரூர்: கரூர் நகர காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பசுபதிபாளையம், வெங்கமேடு மற்றும் வெள்ளியணை காவல் நிலையங்களில் மூன்று வழிப்பறி மற்றும் தொடர் திருட்டு வழக்குகள் பதியப்பட்டிருந்தன. இந்த வழக்குகளில் தொடர்புடைய, கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி பாளையத்தான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மங்கலம் என்கிற செல்வராஜ் (36), தற்போது தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகர், இரண்டாவது தெருவில் வசித்து வந்துள்ளார்.
மேலும், கரூர் மாவட்டம் சோமூர் அருகே உள்ள முத்தமிழ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் என்கிற கிசாப்பாய் (23), தற்போது பசுபதிபாளையம் அருணாச்சலம் நகர் மூன்றாவது கிராஸ் பகுதியில் வசித்து வந்துள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து, இரவு நேரங்களில் தனியாக இரு சக்கர வாகனங்களில் வருவோரை குறி வைத்து, தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவங்கள் போது, திருடு போன பொருட்களை மீட்பதற்காக, நேற்று அழைத்து வந்தபோது, இருவரும் போலீசார் படியில் இருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அங்கிருந்த கல்குவாரியில் விழுந்து இருவருக்கும் எலும்புமுறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் இருவரையும் மீட்ட போலீசார் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
அதேபோல், கடந்த மே மாதம் கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கரூர் வெங்கமேடு சேர்ந்த பரணிபாண்டி (20) மற்றும் மோத்தீஸ் (25) ஆகிய இரண்டு இளைஞர்கள் காவல்துறை பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றபோது, அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மாவட்டம் முழுவதும் முழு கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதாகவும், குற்றங்களை தடுப்பதற்கு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கரூர் எஸ்.பி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் மகளை கடத்தி மனைவியை கொல்வதாக மிரட்டல்.. பதற்றத்தில் அயனாவரம்..!