வேலூர்: வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகம், “தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டில் ஒன்பது கட்சிகள் கூட்டணியாக இணைந்து போட்டிடுவதால் பாஜக அதிக அளவில் வெற்றி பெறுவோம். கடந்த 11 மாதங்களாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு முகாம், இளைஞர்களுக்கு விளையாட்டு ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
ஒன்பது கட்சியின் கூட்டணி மட்டுமல்லாமல், மக்களோடு கூட்டணி வைத்து போட்டியிடுகிறோம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வர உள்ளார். அதில் வேலூரிலும் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்வார்” என்றார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தழுதழுத்த குரலில் அழுதவாறு பேசியது குறித்த கேள்விக்கு, “தற்போது அழுவதை விட, அண்ணன் துரைமுருகன் எம்பியாக இருந்தபோது ஒவ்வொரு கிராமங்களுக்கும், ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று, அரசுத் திட்டங்களை நிறைவேற்ற சொல்லி இருக்கலாம். ஆனால், அந்தப் பகுதிகளுக்கு எம்பி தேர்வான பிறகு செல்லவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அப்படி மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டு, மத்திய மாநில அரசு திட்டங்களை நிறைவேற்றி இருந்தால், அதாவது வேலூர் நாடாளுமன்றத்தையே திருப்பிப் போட்டிருந்திருக்களாம். தொகுதியில் மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களால், வேலூர் மாவட்டத்தில் ஒருவர்கூட ஏழை இல்லாமல் மாற்றி இருக்கலாம். ஆனால், அதனை அப்பாவும் செய்யவில்லை, மகனும் செய்யவில்லை. மழைக்காலங்களில் பாலாற்றில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்கும் வகையில் தடுப்பணைகளை கட்டி விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்து இருக்கலாம். ஆனால், அதனை யாரும் செய்ய முன்வரவில்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தான் தனது கடைசி போட்டி, இனி வரும் காலங்களில் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் தான் தேர்தலில் போட்டியிடுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் களத்தில் முன்னிலையில் இருக்கும், வெற்றி பெறுவதிலும் முன்னிலையில் இருக்கும்.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், தான் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற இருப்பதாகவும் அந்த திட்டங்களை விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் கூறினார். கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் பணம் பிடிப்பட்டது. இதனால் தேர்தலும் நிறுத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது, அதற்காக நீங்கள் உங்கள் கட்சி சார்பில் என்ன செய்தீர்கள். நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டுமென” அவர் கூறினார்.