வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில், தனியார் நிறுவனம் நடத்திய ஆறு மாவட்டங்களுக்கான மாபெரும் ஆணழகன் போட்டி இன்று (ஏப்.21) நடைபெற்றது. இந்தப் போட்டியினை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளரும் மற்றும் புதிய நீதி கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், "வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 95 சதவீதம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், அணைக்கட்டு அடுத்த பிஞ்சமந்தை என்ற மலைக் கிராமத்தில், மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் 3 பஞ்சாயத்துகள் இருக்கிறது. அப்பகுதியில் எங்களை வாக்காளர் பூத் கூட பார்வையிட அனுமதிக்காமல், குண்டர்கள் போல் திமுகவினர் செயல்பட்டனர்.
ஆகவே, என்னுடைய சார்பில், இது குறித்து புகார் மனு ஒன்றை மாவட்டத் தேர்தல் அலுவலருக்கு கொடுக்கப்பட்டது. அதன்படி, அப்பகுதியில் பாதுகாப்பிற்கு மத்தியப் பாதுகாப்புப் படை அனுப்புங்கள் என்று நான் அந்த மனுவில் கேட்டுக் கொண்டேன். ஆனால், எனது கோரிக்கை அங்கு முறைப்படுத்தவில்லை.
மேலும், எங்களுடைய பூத் ஏஜெண்டுகளை அடித்திருக்கிறார்கள் மற்றும் பிஞ்சமந்தை என்ற மலைக் கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட மூன்று பஞ்சாயத்துகளில், பூத் கேப்சரிங் நடந்திருக்கிறது. ஆகவே, பூத் கேப்சரிங் நடந்த அந்த மூன்று பஞ்சாயத்துகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையை, நாங்கள் மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறோம்.
இதேபோல, கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியிலும் பூத் கேப்சரிங் நடந்திருக்கிறது. திமுகவினர் காவல் துறையினரைப் பயன்படுத்தி, பல இடங்களில் எங்களுக்கு அழுத்தங்கள் கொடுத்திருக்கிறார்கள். எங்களுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகியை திமுகவினர் அடித்துள்ளனர். ஆனால், வழக்கு அடிவாங்கியவர் மீது பதியப்பட்டுள்ளது.
வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து வாக்காளர்களை நீக்கியது என்பது, வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தீவிர அதிமுக மற்றும் தீவிர பாஜகவினரைக் குறிவைத்து அதில் நீக்கி உள்ளனர். இந்த விஷயம் ஆரம்பத்தில் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு பூத்தில் நூறு வாக்குகள் குறைந்தால், அது திமுகவினருக்குச் சாதகம்தானே. மேலும், திரைப்பட நடிகர் சூரிக்கு கூட ஓட்டு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்!