வேலூர்: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி ஊராட்சி பொம்மன்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா (30). இவரது மனைவி டயானா (25). இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், டயானா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இவருக்கு கடந்த 27ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதனை தொடர்ந்து, டயானாவிற்கு ரத்த அளவு குறைந்து இருந்ததால் அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அங்கு சிகிச்சை முடிந்து 9 நாட்கள் கழித்து கடந்த 4 ஆம் தேதி தாயையும், குழந்தையையும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.
குழந்தைக்கு விஷ பால்: வீட்டிற்கு வந்ததும் குழந்தைக்கு பெயரும் வைத்துள்ளனர். ஆனால், ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்து, பெண் குழந்தை பிறந்ததால் ஜீவா - டயானா தம்பதி அதிருப்தியில் இருந்துள்ளனர். இதனால் பெற்ற குழந்தையை கொல்ல முடிவெடுத்த இருவரும், வீட்டருகே இருந்த பப்பாளி மரத்தை வெட்டி, அதில் வடியும் விஷம் நிறைந்த பாலை கல் நெஞ்சம் படைத்த தாயும், தந்தையும் அந்த பிஞ்சு குழந்தைக்கு ஊற்றியுள்ளனர்.
இதனால், சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை வாய், மூக்கில் ரத்தம் கொட்டி துடி துடித்து இறந்து போனது. பின்னர், இது எதுவுமே நடக்காதது போல் நாடகமாடிய தம்பதி, '' குழந்தை திடீரென மூச்சு பேச்சு இல்லாமல் உள்ளது, உடனே வந்து பார்க்கும்படி டயானா தனது தாய், தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் கேட்டு அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது.
பெற்றோரிடம் நாடகம்: அப்போது, குழந்தை எப்படி இறந்தது என்று டயானாவின் தந்தை சரவணன் கேட்டுள்ளார். அதற்கு மருமகன் ஜீவா, போர்வையை எடுத்து குழந்தை முகத்தில் போட்டு விட்டதால் தான் குழந்தை இறந்தது என்று கூறி இருவரும் நாடகமாடியுள்ளனர். மேலும், குழந்தை இறந்த விஷயத்தை ஜீவா தனது தந்தையிடம் கூட சொல்லவில்லை என கூறப்படுகிறது.
இதனால் குழப்பமடைந்த டயானாவின் பெற்றோர் சிறிது தூரம் சென்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அதற்குள் ஜீவா மற்றும் அவரது மனைவி டயானா அவசர அவசரமாக வீட்டின் அருகிலேயே விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் பள்ளம் தோண்டி குழந்தையின் சடலத்தை புதைத்துள்ளனர்.
தாத்தா கொடுத்த புகார்: இதனால், சந்தேகமடைந்த டயானாவின் தந்தை சரவணன் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ''எனது மகள் டயானாவிற்கு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 27ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. 9 நாட்கள் முடிந்த பிறகு தாயும், சேயும் நலமுடன் தான் வீட்டிற்கு சென்றனர். ஆனால், காலை 11.30 மணியளவில் குழந்தை மர்மமான முறையில் மூக்கு, வாயில் ரத்தம் வடிய இறந்து கிடந்தது. மேலும், குழந்தை இறந்த விஷயத்தை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்களுக்கு கூட சொல்லாமல் வீட்டின் அருகிலேயே புதைத்து விட்டனர். எனது பேத்தியின் இறப்பில் சந்தேகம் உள்ளதால் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து, இறப்பிற்கான உண்மை காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
சாதாரணமாக இருந்த தம்பதி: தொடர்ந்து, புகாரை பெற்று கொண்ட வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால், கணவன், மனைவியான ஜீவா மற்றும் டயானா இருவரும் பேசி வைத்தது போல் ஒரே பதில் கூறினர். மேலும், பெற்ற குழந்தையின் இறப்பின் துக்கத்தைகூட காட்டிக்கொள்ளாமல், இருவரும் வழக்கம்போல வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
போலீசாரும் விசாரித்தபடி அவர்களை கண்காணித்து கொண்டே இருந்தனர். சுதாரித்துக்கொண்ட தம்பதி, தங்கள் முதல் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் தப்பியோடி பதுங்கிக்கொண்டனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் கணவன், மனைவி இருவரையும் துரத்தி சென்றனர். ஆனால், அங்கு முழுவதும் மலைகள், காடுகள் என்பதால் தேடும் முயற்சி தோல்வி அடைந்தது. இதற்கிடையே, அவர்களது இரண்டு வயது பெண் குழந்தை பெற்றோர் இன்றி கதறிய அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
தொடர்ந்து இதுகுறித்து, தகவலறிந்த இன்ஸ்பெக்டர் தமிழரசி (பொறுப்பு) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குழந்தை புதைத்த இடம், வெட்டப்பட்ட பப்பாளி மரம் மற்றும் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டார். இதுதொடர்பாக குழந்தையின் தாத்தா சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
தொடர்ந்து நேற்று போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தம்பதி கைது: குழந்தையை கொன்று புதைத்துவிட்டு காட்டுக்குள் தப்பியோடிய தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், இருவரும் அவர்களுடைய உறவினர் உமாபதி என்பவர் வீட்டில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கிருந்த ஜீவா மற்றும் டயானாவை கைது செய்ததோடு, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த உமாபதியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: இரவில் லிப்ட் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிக்கிய வாலிபர்கள்.. தஞ்சையில் அதிர்ச்சி!