சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை தினத்தையொட்டி, அக்.6ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து பகல் 1 மணி வரையில் சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை விமானங்களின் வீர சாகச நிகழ்ச்சிகள் ஏர் ஷோ பொதுமக்களின் பார்வைக்காக நடத்தப்பட உள்ளது. அதனால், இன்று முதல் இந்த விமானப்படை வீர சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகள் வரும் அக்டோபர் 8ஆம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை மற்றும் தாம்பரம் விமானப்படைத்தளம் ஆகிய இடங்களில் நடக்கவிருக்கிறது.
அந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறங்குவது விமானப்படை சாகசங்கள் செய்யும் விமானங்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வரும் 8ஆம் தேதி வரையில் 15 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரையில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு சென்னை விமான நிலையமும் தற்காலிகமாக அந்த நேரங்களில் மூடப்படுகிறது.
அந்த வகையில் முதல் நாளான இன்று பகல் 1.45 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் சென்னை விமான நிலையம் மூடப்பட்டு விமான சேவைகளின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து பகல் 1.45 மணியிலிருந்து மாலை 3.15 மணி வரையில் 15 விமானங்கள் புறப்படுகின்றன. அதில் சிங்கப்பூர், டாக்கா, யாழ்ப்பாணம் ஆகிய 3 சர்வதேச விமானங்களும் 12 உள்நாட்டு விமானங்களும் அடங்கும். அந்த விமானங்கள் அனைத்தும் இன்று மாலை 3.20 மணிக்கு மேல், புறப்பட்டுச் செல்லும் விதத்தில் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விமானப் படை சாகச நிகழ்ச்சி; சென்னை விமான நிலைய சேவைகளில் மாற்றம்!
நேரம் மாற்றப்பட்ட விமான சேவைகள்: இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன்று பகல் 1.55 மணிக்கு சென்னையில் இருந்து கோவா புறப்பட்டு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மாலை 3.20 மணிக்கும், பகல் 2.15 மணிக்கு சென்னை டெல்லி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மாலை 3.35 மணிக்கும், சென்னை- சிங்கப்பூர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பிற்பகல் 2.25 மணிக்கு பதிலாக மாலை 3.20 மணிக்கும் கிளம்பும்.
மேலும், சென்னை - தூத்துக்குடி விமானம், பிற்பகல் 2.20 மணிக்கு பதிலாக, மாலை 3.30 மணிக்கும், சென்னை - கோவை விமானம் பிற்பகல் 2.25 மணிக்கு பதிலாக, மாலை 3.20 மணிக்கும், சென்னை - ராஜமுந்திரி விமானம் பிற்பகல் 2.25 மணிக்கு பதிலாக, மாலை 3.25 மணிக்கும், சென்னை - சீரடி பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக, மாலை 3.30 மணிக்கும், சென்னை- கொல்கத்தா விமானம் மாலை 3 மணிக்கு பதிலாக, மாலை 3.35 மணிக்கும், சென்னை - மும்பை விமானம், மாலை 3 மணிக்கு பதிலாக மாலை 3.15 மணிக்கும், சென்னை புனே விமானம் மாலை 3 மணிக்கு பதிலாக, மாலை 4 மணிக்கும் கிளம்பும்.
இதையும் படிங்க: பாரதமே அதிரப்போகுது; விமானப் படையின் திகைப்பூட்டும் சாகசத்திற்கு தயாரா?
அதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம், டாக்கா, மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட விமானங்களின் புறப்பாடு நேரங்களும் மாலை 3.30 மணிக்கு மேல் புறப்படுவதுபோல் மாற்றப்படுகிறது. அதைப்போல் இன்று பகல் 1.45 மணியிலிருந்து, மாலை 3.15 மணி வரையில், சென்னைக்கு வந்து தரையிறங்கும் விமானங்களான யாழ்ப்பாணம், கொழும்பு, அபுதாபி, டாக்கா, சீரடி, மதுரை, டெல்லி உள்ளிட்ட 10 விமானங்களின் நேரங்கள், மாலை 3.15 மணிக்கு மேல், சென்னையில் வந்து தரை இறங்குவது போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
25 விமானங்களின் நேரம் மாற்றம்: இதனால், சென்னை விமான நிலையத்தில் இன்று பகல் 1.45 மணி முதல், மாலை 3.15 மணி வரையிலான, ஒன்றரை மணி நேரத்தில், புறப்பாடு விமானங்கள் 15, வருகை விமானங்கள் 10 என மொத்தம் 25 விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதனால், பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, நேரம் மாற்றம் குறித்து உறுதி செய்து கொண்டு, பின்னர் தங்கள் பயணத்தை மேற்கொள்ளவும்" என இந்திய விமான நிலைய ஆணையம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்