கரூர்: தோகமலை அருகே கொசூர் என்ற இடத்தில் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் பேக்கரி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜூன் 9ஆம் தேதி மாலை 6 மணியளவில், கோட்டைகரையாம்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் பேக்கரிக்கு வந்துள்ளார்.
வேல்முருகன் பாதாம் கீர் வாங்கி குடித்துவிட்டு, பில் செலுத்தும் போது பாதாம் கீர் 30 ரூபாய் என பேக்கரி உரிமையாளர் கூறியுள்ளார். பாதாம் கீரின் விலை 25 ரூபாய் என்று தானே பாட்டிலில் உள்ளது என வேல்முருகன் கேட்டபோது, ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக தருவதற்கு கூடுதலாக 5 ரூபாய் எனக் கூறியுள்ளார்.
ஆனால், வேல்முருகன் பாதாம் கீர் கூலிங் குறைவாகவே உள்ளது, இதற்கு ஏன் கூடுதலாக ஐந்து ரூபாய் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளருக்கும், வேல்முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பணத்தைச் செலுத்தி விட்டு பேக்கரியிலிருந்து வெளியேறிய வேல்முருகன், தனது நண்பர்களிடம் இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து வேல்முருகன், கோட்டைகரையாம்பட்டியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்து வந்து பேக்கரியில் புகுந்து, கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சரவணன் மற்றும் சிவக்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் கடையின் உரிமையாளர் கோவிந்தராஜ் (50) மற்றும் அவரது மகன்கள் சரவணன் (24) மற்றும் சிவக்குமார் (19) ஆகிய மூன்று பேரும் காயமடைந்து, மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும், இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, திருச்சி மாவட்டம் அவத்தூர், பரமசிவம் நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் கோபால் (27), கரூர், கோட்டைக்கரையான்பட்டியை சேர்ந்த முருகன் மகன் பழனிக்குமார் (30) , சுப்பிரமணி மகன் பழனிக்குமார் (29) உள்ளிட்ட ஆறு பேரை இன்று காலை கைது செய்து, நீதிபதி முன்ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலரை சிந்தாமணிபட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "பாஜகவின் அழுத்தத்திற்கு பயந்து அதிமுக களத்தை விட்டுக் கொடுத்துள்ளது" - ஜோதிமணி தாக்கு! - MP JOTHIMANI