சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டும் சுமார் 18 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நாளை பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்கு செலுத்தும் வகையில், அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்துள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எது என அறியப்பட்டு, அங்கு கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், துணை ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து முழு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் பாதுகாப்பிற்காக துணை ராணுவத்தினர் ஏற்கனவே சென்னை வந்துள்ள நிலையில், மேலும் கூடுதலான துணை இராணுவ அதிகாரிகள் சென்னை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் எனவும், உள்ளே வாக்கு செலுத்த வரும் நபர்கள் அனைவரும் முழு சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாக்குச்சாவடிகள் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு, எந்தெந்த மையங்களில் கூடுதலான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யலாம் என ஆலோசனை செய்து வருவதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “கடைசி வாக்காளர் வரை வாக்களிக்க நடவடிக்கை” - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு! - Lok Sabha Election 2024