சென்னை: ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் சாக்கோபார், பால் (Ball) வெண்ணிலா, கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லெட் உள்ளிட்ட ஐஸ்கிரீம் விலையை உயர்த்துகிறது என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக ஐஸ்கிரீம் விலை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விலை உயர்த்தி ஆவின் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. அதில்,
- 65 ML சாக்கோ பார் விலை 20 ரூபாயிலிருந்து 25 ஆக உயர்வு
- 125 ML வெண்ணிலா பால் விலை 28 ரூபாயிலிருந்து ரூ.30 ஆக உயர்வு
- 100 ML கிளாசிக் வெண்ணிலா கோன் 30 ரூபாயிலிருந்து 35 ரூபாய் ஆக உயர்வு
- 100 ML கிளாசிக் சாக்லேட் கோன் 30 ரூபாயிலிருந்து 35 ரூபாய் ஆக உயர்வு
இந்த விலை உயர்வு வரும் 3ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்கிரீம் விலை உயர்வுக்குக் காரணம் என்ன? ஆவின் நிர்வாகம் விளக்கம்: தமிழ்நாட்டில் அனைத்துப் பொதுமக்களுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் உபயோகப் பொருட்கள் தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
மேலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்கள் ஆவின் நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடைக் காலத்தில் கூடுதலாக 20% விற்பனையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இடுபொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் தற்பொழுது, நான்கு வகையான ஐஸ்கிரீம் விலையை மட்டுமே ஆவின் நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது. இந்த சிறிய விலையேற்றம் இன்றியமையாததாகும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், எதிர்வரும் கோடைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களும் குழந்தைகளும் ஆவின் சுவையான ஐஸ்கிரீமை வாங்கி மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேற்படிப்பு பயில தமிழக மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் நியூசிலாந்து!