சென்னை: தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில், இன்று (ஏப்.02) அதிகாலை தன் நண்பர்களுடன் சைக்கிளிங் சென்ற கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர், கார் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராகுல்(22). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஏப்.02) அதிகாலை ராகுல் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோடம்பாக்கத்தில் இருந்து சைக்கிளிங் சென்றுள்ளார்.
தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில், குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று, அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் ராகுல் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அதிவேகமாக விபத்தை ஏற்படுத்திய கார், நெடுஞ்சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழந்துள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராகுலின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் ஆதித்யா (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இவர் காலை தன் காரில் கல்லூரிக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.