தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை வைத்தியநாதபுரத்தில் வசித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் மனோகரன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். முன்னாள் ராணுவ வீரரின் இறுதி ஊர்வலம் நேற்று (மே 8) மாலை நடைபெற்றது.
அப்பொழுது, அதே பகுதியைச் சேர்ந்த அருண் மற்றும் அவரது அண்ணன் சூர்யா ஆகிய இருவரும் சேர்ந்து வெடி போடும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வெடி போட்டதாகக் கூறி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவர்களைக் கண்டித்ததாகவும், இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இறந்தவரின் உடலை அடக்கம் செய்த பின்பு வெடி போட்ட அருண் மற்றும் அவரது அண்ணன் சூர்யா ஆகிய இருவரும் தங்களைக் கண்டித்தவர்களை அரிவாளைக் கொண்டு தாக்க முற்பட்டதாகவும், இதனால் வெடி போட்ட போது கண்டித்த இளைஞர்களுக்கும் சகோதரர்களான அருண் மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் அருண் என்ற இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் தப்பி ஓடியதாகவும், இதனைத் தொடர்ந்து, படுகாயம் அடைந்த அருணின் அண்ணனான சூர்யா பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திற்குச் சென்று தனது தம்பியை அரிவாளால் வெட்டி, பலமாக தாக்கியதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், பெரியகுளம் வடகரை காவல் நிலைய காவலர்கள் சம்பவம் நடந்த இடத்தில் அருண் என்ற இளைஞரை தேடிய பொழுது, தப்பி ஓடி முள் புதருக்குள் மறைந்திருந்த அருணை உயிரிழந்த நிலையில் சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இதனை அடுத்து, உயிரிழந்த அருணின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனை. அதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கொலைச் சம்பவத்தில் பலியான அருண் மற்றும் அவரது அண்ணனான சூர்யா ஆகிய இருவர் மீதும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலூரில் தூய்மைப்பணியாளரை இடித்து விட்டு அலட்சியமாக சென்ற நபர்..சிசிடிவி காட்சிகள் வைரல்!