திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சத்தியமூர்த்தி காலனி பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள கடம்பன்குளம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் மகேந்திரன் (வயது 18) பொக்லைன் இயந்திரம் இயக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று பொக்லைன் இயந்திரம் மூலம் ரயில்வே மேம்பாலத்தில் உயரமான பகுதியில் மணலை அப்புறப்படுத்தும் பணியில் மகேந்திரன் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். மணல் மேடு திடீரென சரிந்ததில் நிலை தடுமாறி பொக்லைன் இயந்திரம் செங்குத்தாக தலைகுப்புற கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் பொக்லைன் இயந்திரத்தை இயக்கி கொண்டிருந்த மகேந்திரன், வாகனத்தில் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், மற்றொரு பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த பொக்லைன் இயந்திரத்தை அப்புறப்படுத்தினர்.
பின்னர், விபத்தில் சிக்கி மரணமடைந்த மகேந்திரனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாடு முட்டியதில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த நீதிமன்ற ஊழியர்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!