தஞ்சாவூர்: திருச்சி லால்குடி திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் மகன் ஆதவன் (22). இவர் சென்னையில் எம்.ஆர்.எப் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவர் சித்தப்பா வேலவேந்தனின் மகன் தமிழ் (24), இவர்களின் எதிர்வீட்டைச் சேர்ந்த முத்தம்மாள் (36), அவரது மகன் அருண்குமார் (23), மகள் சிந்து (21) ஆகிய ஐந்து பேரும், நேற்று (மார்ச் 16) காலை ஆதவனின் ஹோண்டா சிவிக் காரில், திருநள்ளாறு சனிபகவான் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு சனிபகவானை தரிசித்ததைத் தொடர்ந்து, திருநாகேஸ்வரம் ராகுபகவான் கோயிலுக்கும், பின்னர் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்துள்ளனர். இதையடுத்து, இவர்கள் மீண்டும் திருவையாறு சாலை வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் காவல் சரகம், வடசருக்கை கிராமத்தில் திடீரென காரின் முன்பக்க வலதுபுற டயர் வெடித்ததில், கார் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சாலையோரம் இருந்த பனை மரத்தில் கார் வேகமாக மோதியதில், காரை ஓட்டி வந்த ஆதவன் மற்றும் காரில் உடன் பயணித்த 4 பேரும் படுகாயமுற்றுள்ளனர். அருகில் இருந்த சிலர் இவர்களை மீட்டு, உடனடியாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே ஆதவன் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, காயமுற்ற நால்வரும் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, திருச்சி தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற கொண்டு செல்லப்பட்டனர். மேலும், உயிரிழந்த ஆதவனின் உடல், உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இவ்விபத்து குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் பணி! விழுப்புரத்தில் சோதனையில் களமிறங்கிய பறக்கும் படை..