கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், அட்டுக்கல் மற்றும் கெம்பனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, கெம்பனூர், விராலியூர் பகுதிகளில் ஊருக்குள் புகும் காட்டு யானைகள் தோட்டங்களில் வைக்கப்பட்டிருக்கும் புண்ணாக்கு, தவிடு மற்றும் ரேஷன் அரிசிகளை சாப்பிடுவது வழக்கமாகி வருகிறது.
அதுமட்டுமின்றி இந்த யானைகள் வீட்டை உடைத்துக் கொண்டு உணவுப் பொருட்களைத் தேடுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணியளவில் விராலியூர் கிராமத்திற்குள் ஒற்றை ஆண் யானை புகுந்துள்ளது. போளுவம்பட்டி வனத்துறையினர் அளித்த தகவலின் படி, பெருமாள் கோயிலில் பூஜைகளை முடித்துவிட்டு, கோயில் பூசாரி பாஸ்கரன் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென எதிரே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை பாஸ்கரனை தும்பிக்கையால் தள்ளித் தூக்கி வீசியதில் அவர் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பாஸ்கரனின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், சத்தம் எழுப்பி யானையை விரட்டினர். அதனைத் தொடர்ந்து, பாஸ்கரனை மீட்ட அப்பகுதியினர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அந்த யானை அருகில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக சென்றபோது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டுக் கொண்டே யானையின் பின்னால் விரட்டிச் சென்றனர். அப்போது திடீரென யானை திரும்பி விரட்டியது. விராலியூரைச் சேர்ந்த கார்த்திக்கை தும்பிக்கையால் பிடித்து யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு யானையை விரட்டியடித்தனர். மேலும் இதுகுறித்து போளுவாம்பட்டி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இதற்கிடையே ஊருக்குள் புகுந்த காட்டு யானையை இளைஞர்கள் விரட்டிச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கார்த்திக் தனது நண்பருடன் யானையை துரத்திச் செல்லும் இறுதிக் காட்சிகளும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, ஊருக்குள் அல்லது தோட்டங்களில் யானைகள் புகுந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், அதனைப் பொதுமக்கள் யாரும் விரட்டக் கூடாது எனவும் வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், யானை விரட்ட எடுத்த முயற்சியில், யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இதுபோன்று மீண்டும் முயற்சிக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்