சேலம்: எடப்பாடி காவல் நிலையத்தில் நேற்று அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிவிடி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் ஆய்வு செய்து வந்தனர். இதற்கிடையே, குற்றவாளியைப் பிடிப்பதற்காக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், 3 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தேட உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இதைவிட மோசமாக சட்ட ஒழுங்கு சீர்கேடு இருக்க முடியாது. காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டத்தின் மீதும், காவல்துறையினர் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைகுனிய வேண்டும்" என அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, போலீசார் சுமார் 10 மணி நேரத்தில் தீவிர விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு வீசிய நபரை அதிரடியாக கைது செய்தனர். அதாவது, எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்டு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆதி என்கிற ஆதித்யா(20) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பல தகவல்களைக் கூறியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, யூடியூப், பேஸ்புக் இதையெல்லாம் பார்த்து மூளைச்சலவையான இளைஞர், ரவுடிசம் செய்தால் மட்டுமே பிரபலமாக முடியும் என எண்ணி. நம்முடைய பெயரும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் பெட்ரோல் குண்டை வீசியதாகத் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், "இரண்டு பீர் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி அதில் பேப்பரை சொருகி தீ பற்ற வைத்து காவல் நிலையத்தில் வீசியுள்ளார். ஆனால், எந்த ஒரு பொருட்களும் சேதம் ஆகவில்லை, யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து, 3 போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பெட்ரோல் குண்டு வீசிய ஆதித்யா என்ற இளைஞரை சம்பவம் நடந்த 10 மணி நேரத்தில் கைது செய்துள்ளோம். அவர், யூடியூப், பேஸ்புக் இதையெல்லாம் பார்த்து ரவுடியிசம் செய்பவர்களுக்கு அதிக அளவில் பெயர் வருகிறது. அதனால், தனக்கும் இதுபோல பெயர் வர வேண்டும், தன்னுடைய பெயரும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் இந்த செயலை செய்துள்ளார்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: திமுக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!