மதுரை: மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில், வரிச்சியூருக்கு அருகேயுள்ள நாட்டார்மங்கலம் கலைவாணி நகரில் உள்ளது 'எஸ்எஸ்பி மூலிகை தேடல்' எனும் பெயரிலான பல்வேறு வகை அரிய மூலிகைகளைக் கொண்ட மூலிகை அடர்வனம்.
வெறும் 40 சென்ட் நிலத்தில் இந்த மூலிகை அடர்வனத்தை உருவாக்கினாலும், ஒரு இடம் கூட இடைவெளியில்லாமல் இமயமலையின் அடிவாரத்தில் விளைகின்ற மூலிகையைகூட அவ்வளவு அக்கறையோடு தன் குழந்தைகளுக்கு இணையாக வளர்த்து வருகிறார். வரிச்சியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றி வரும் 'தமிழம்மா' சுபஸ்ரீ, மூலிகைகளின் காதலரான இவர் மூலிகைப் பெண் என்று அழைக்கப்படுகிறார்.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அப்பகுதி மக்களுக்கு நிலவேம்புக் கசாயம் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை வழங்கி இவர் ஆற்றிய பெருந்தொண்டு போற்றுதலுக்குரியது. அதுமட்டுமன்றி, மூலிகைகள் குறித்து தெரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் வருகை தருகின்ற மாணவ, மாணவிகள், ஆய்வாளர்கள், பேராசிரியர்களுக்கு தன்னுடைய வனத்தை மூலிகைப் பல்கலைக்கழகமாகவே மாற்றி வைத்துள்ளார்.
இது குறித்து சுபஸ்ரீ கூறுகையில், "கடந்த 1980ஆம் ஆண்டு எனது 14ஆம் வயதில், என்னுடைய தந்தையை பாம்பு தீண்டியதால் உயிருக்குப் போராடிய நிலையில், அங்கிருந்தோர் அருகிலுள்ள ஒரு மூலிகையின் வாயிலாக அவரைக் காப்பாற்றிய சம்பவம்தான் என்னை மூலிகைத் தேடலுக்கு வித்திட்டது.
அன்று தொடங்கிய பயணம் கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து இன்னும் வேகத்தோடு தொடர்கிறது. இங்கு உள்ள சில அரியவகை மூலிகைச் செடிகளைக் கொண்டு வருவதற்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறேன். அச்செலவுகள் என் சக்திக்கு மீறியதுதான் என்றாலும், அதன் மருத்துவ பயன் அதைவிட முக்கியமானது.
எனது மகளுக்கு டெங்கு காய்ச்சல் வந்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது இங்கு உள்ள மூலிகைகளே காப்பாற்றின. இதுபோன்று என்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களே மூலிகைகளுடனான எனது நெருக்கத்தை அதிகப்படுத்தின.
இதையும் படிங்க: உங்கள் வீடு/கடைகளில் உள்ள எலிகளை விரட்ட எருக்கன் செடி போதும்..இப்படி பயன்படுத்தி பாருங்க..!
மேலும், கரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது நிலவேம்புக் கசாயம் ஆற்றிய மகத்துவத்தைக் கண்கூடாகக் கண்டேன். அப்போதுதான் ஒரு மூலிகை இவ்வளவு மாற்றத்தை உருவாக்கும்போது, இந்த மண்ணில் விளையக்கூடிய அனைத்து மூலிகைகளும் என்னென்ன மாற்றங்களை உருவாக்கும் என்ற சிந்தனையில், இந்த மூலிகை வனத்தை உருவாக்க ஆரம்பித்தேன்.
இதற்காகவே பல்வேறு நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். கபால மூலி, வெண்கொடி வேலி போன்ற மூலிகைகளை பல்வேறு இடங்களில் அழகுத் தாவரமாக வளர்க்கிறார்கள். அவர்களிடம் இதன் அருமைகளைச் சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கிறேன். 'மூலிகை வாசம்..நோயற்ற சுவாசம்..' என்பதுதான் என்னுடைய தாரக மந்திரம். ஒவ்வொரு நாளும் இந்த மூலிகைகளோடு நான் உறவாடி மகிழ்வதே எனக்கு அளவற்ற இன்பம்" என்று தெரிவித்தார்.
மேலும், தன்னோடு இந்தப் பயணம் முடிந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதி காட்டும் மூலிகைப் பெண் சுபஸ்ரீ, "நம் வீட்டைச் சுற்றியுள்ள செடி, கொடி, மூலிகைத்தாவரங்களை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள முற்பட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மூலிகை அல்லது கீரை வகைகளை வீடுகளில் வளர்க்க முன்வர வேண்டும்" என்று வலியுறுத்துகிறார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்