கோயம்புத்தூர்: கோவை ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி ரமாபிரபா. இவர்கள் சென்னையில் உறவினர்கள் வீட்டிற்குச் சென்று விட்டு, உறவினர்களுடன் கேரள மாநிலம் செல்லும் 22639 எண் கொண்ட ஆலப்புழா விரைவு ரயிலில் நேற்று திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் ஆறு இளைஞர்கள் முன்பதிவு ரயில் பெட்டியில் ஏறி, கழிவறை அருகே நின்றுகொண்டு புகைப்பிடித்துக் கொண்டும், அதிக ஒலியில் சினிமா பாடல்கள் பாடியவாறும் ஆட்டம் ஆடி கொண்டு வந்துள்ளனர். இதனால், அந்த பெட்டியில் உறங்கிக் கொண்டிருந்த ரயில் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
இந்தச் சூழலில், ரமாபிரபா அந்த இளைஞர்களிடம் கைக்குழந்தைகள், பெரியவர்கள் எல்லாம் இருப்பதால் அமைதியாக வருமாறு கூறியுள்ளார். அதற்கு செவி சாய்க்காத அந்த இளைஞர்கள், ரமாவிடம் தகராறில் ஈடுபடத் துவங்கி உள்ளனர்.
மேலும், மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரமாபிரபா, அவரது தம்பியை அழைத்துள்ளார். அந்த இளைஞர்கள் அவரது தம்பியையும் தாக்கி தகராறு செய்துள்ளனர். பின்னர், திருப்பூர் ரயில் நிலையத்தில் அந்த இளைஞர்கள் இறங்கிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தின் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து பேட்டியளித்த ரமாபிரபா, ரயிலில் நடந்த சம்பவத்தை விவரித்தார். இளைஞர்கள் தகராறில் ஈடுபடும் போது அருகில் இருந்த ஓரிருவர் மட்டுமே உதவிக்கு வந்ததாகவும், பலரும் உதவ வரவில்லை என்றும் கூறினார். அதேபோல், நேற்றைய தினம் ரயிலில் ரயில்வே போலீசாரும் இல்லை என தெரிவித்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்டது தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் என குறிப்பிட்ட அவர், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: மலைக்கிராமத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்கள்.. பதறிய பொதுமக்கள்! - Helicopters In Tiruvannamalai