கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியில் திமுகவைச் சார்ந்த 22 கவுன்சிலர்கள் 5 சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 27 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த நிலையில், பள்ளப்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகர்மன்ற கூட்டம் கடந்த 27ஆம் தேதி அன்று நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிந்தவுடன், நகராட்சி சார்பில் நடைபெற்ற பணிகள் குறித்தும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்தும் கணக்கு கூட்டம் வைக்கவில்லை என்றும், டெண்டர் கமிஷனில் பங்கு தொகை வழங்கவில்லை என்றும் பள்ளப்பட்டி நகர்மன்ற தலைவரான முனவர் ஜானின் அறைக்குச் சென்ற திமுக நகர மன்ற உறுப்பினர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
இதன் பின்னர், நகர்மன்ற அலுவலகத்தில் இருந்து வெளியேறிய நகர்மன்ற தலைவர் முனவர் ஜானை வழிமறித்து, திமுக கவுன்சிலர்கள் சிலர் நகராட்சி அலுவலகம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், 3-வது வார்டு கவுன்சிலர் நத்தம் ஜாபர், 9-வது வார்டு கவுன்சிலர் A.J.சாதிக் அலி ஆகியோர் ஆபாச வார்த்தைகளால் பேசுவதாக பதிவாகியுள்ளது. மேலும், நகர்மன்ற தலைவர் முனவர் ஜான் திமுக கவுன்சிலர்கள் தகராறில் ஈடுபடுவதை தனது செல்ஃபோனில் படம்பிடிக்க முயற்சித்தபோது, 9-வது வார்டு திமுக கவுன்சிலர் A.J.சாதிக் அலி, நகர்மன்ற தலைவரை பெண் என்றும் பாராது ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதுமட்டும் அல்லாது, இதனை தட்டிக்கேட்ட சக திமுக கவுன்சிலர்கள் மத்தியில், தனது வேட்டியை தூக்கிக்காட்டி, அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டுள்ளார் A.J.சாதிக் அலி. இது அங்கிருந்த பலரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது.
இத்தகைய சூழலில், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் இதுவரை பள்ளப்பட்டி நகர்மன்ற தலைவர் முனவர் ஜான் எந்த புகாரும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இந்த நிலையில், நகராட்சி தலைவர் முனவர் ஜானை பெண் என்றும் பாராமல் ஆபாசமாக பேசி, அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்ட திமுக கவுன்சிலர் A.J.சாதிக் அலி மீது உறிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை மின்சார ரயிலில் வடமாநில இளைஞரை தாக்கிய திருநங்கை கைது!