ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பெண் யானை கடந்த (மார்ச் 5) உயிரிழந்தது. இந்த யானைக்கு 3 வயதான ஆண் யானை மற்றும் பிறந்து சில மாதங்களே ஆன பெண் யானை என இரண்டு குட்டிகள் இருந்தன.
தாய் யானை இறந்ததால், 3 வயதான ஆண் யானையானது, தனது யானைக் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டது. ஆனால், பிறந்து சில மாதங்களே ஆன பெண் குட்டி யானையின் மறுவாழ்வுக்கு என்ன செய்வது என்று வனத்துறையினர் ஆராய்ந்து, அதையும் யானைக் கூட்டத்தோடு சேர்க்க தீவிர முயற்சிக்குப் பின்னர் வனப்பகுதியில் விட்டனர்.
அப்போது குட்டி யானையைப் பார்த்ததும், யானைக் கூட்டத்திலிருந்து ஓடி வந்த பெண் யானை ஒன்று, குட்டி யானையை அரவணைத்து தனது கூட்டத்துடன் அழைத்துச் சென்றது. இதனால், வனத்துறையினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், திடீரென இந்த யானைக் கூட்டத்தில் இருந்து பெண் குட்டி யானை வெளியேறியது. இதற்கு பின்னர், இரண்டாவது முறையாக இந்த யானை குட்டியை பண்ணாரியில் இருந்த இரண்டாவது யானைக் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டது. ஆனால், அங்கிருந்தும் யானை குட்டி வெளியேறியது.
இதைத்தொடர்ந்து யானை குட்டி, மீண்டும் மூன்றாவது முறையாக அதே பகுதியில் இருந்த மற்றொரு யானைக் கூட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதற்கு பிறகும் யானை குட்டி, அக்கூட்டத்தில் இருந்தும் வெளியேறியது. இதைக் கண்டு செய்வதறியாத வனத்துறையினர் யானை குட்டியை மீட்டு நான்காவது முறையாக ஆசனூர் வனப்பகுதியில் விட்டுள்ளனர். அங்கிருந்தும் வெளியேறிய யானை குட்டி நேற்று (மார்ச் 07) அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி, ஆசனூர் அருகே உள்ள அரேப்பாளையம் கிராமத்தில் புகுந்து, அப்பகுதியில் உள்ள சாலையில் நடமாடியுள்ளது.
குட்டி யானை கிராமப்பகுதியில் நடமாடுவதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, இது குறித்த தகவலை ஆசனூர் வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தாயைப் பிரிந்து வாடும் குட்டி யானையை மீட்டு, தற்போது ஆசனூர் மாவட்ட வன அலுவலகத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
மேலும், குட்டி யானையை பராமரிப்பதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 4 வனத்துறை கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் ஆசனூர் வன அலுவலகத்தில் முகாமிட்டு குட்டி யானையின் உடல்நலனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து சத்தியமங்கலம் வனச்சரகர் கூறுகையில், “பண்ணாரி வனப்பகுதியில் பெண் யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இதனால், இரண்டு மாதமே ஆன, அதன் பெண் குட்டி யானை, மார்ச் 5 ஆம் தேதி அதே குடும்பத்தைச் சேர்ந்த தனது யானைக் கூட்டத்தில் சேர்க்கப்பட்டது. அந்த யானைக் கூட்டத்தில் உள்ள பெண் யானையும் அப்போது, பாசத்துடன் இந்த குட்டி யானையை சேர்த்துக் கொண்டது.
அதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். குட்டி யானைகள் பொதுவாக தாயைத் தவிர வேறு யானைகளோடு ஒன்று சேர்வது மிகவும் அரிதானது. இதை வனத்துறையினர் முயற்சி செய்து குட்டி யானையை அதன் குடும்பத்தைச் சேர்ந்த யானைக் குழுவில் சேர்த்தனர்.
இதற்கிடையே உடல் நலக்குறைவால் இறந்த பெண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்த நிலையில், கல்லீரல் வீக்கம், இதய பகுதி வீக்கம், மண்ணீரலில் ரத்தக்காயம் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தது தெரியவந்தது. மேலும், யானையின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யானைக்கூட்டத்துடன் சேர்க்கப்பட்ட குட்டி யானை, மனிதர்களுடன் பழகியதால், அந்த யானைக்கூட்டத்திலிருந்து வெளியேறியது. பலமுறை மற்ற யானைக் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டும் குட்டி யானைக் கூட்டத்திலிருந்து வெளியேறி, கிராமங்களுக்குள் புகுந்து சாலைகளில் நடமாடியது. இதனால், வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு பராமரித்து வருகின்றனர்.
தற்போது, குட்டி யானைக்கு லாக்டோஜன் திரவ உணவு வழங்கப்பட்டு வருகிறது. குட்டி யானை தற்போது, ஹாயாக வாக்கிங் செல்கிறது. வன ஊழியர்களுடன் சகஜமாக பழகி வருகிறது. அரசு உத்தரவு கிடைத்தவுடன் இந்த குட்டி யானை, யானைகள் காப்பத்துக்கு அனுப்பி வைக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கண்ணைக் கவரும் தஞ்சை கண்ணாடி கலைப்பொருள்கள்.. அசத்தும் பெண் தொழில் முனைவோர்!