கோயம்புத்தூர்: கோவை அடுத்த தொண்டாமுத்தூர் சாலை, உலியம்பாளையம் அடுத்த குப்புசாமி வீதியில் வசித்து வருபவர் ஞானசுந்தரம் என்ற குமார் (44). இவர் கொசு வலை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு, அவரது மனைவி மற்றும் மகன் உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) மதியம் தனது மனைவி மற்றும் மகனை அழைத்து வர, தன் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், இன்று (செவ்வாய்க்கிழமை) தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது, உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறை உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு ஆடைகள் களையப்பட்டு இருந்துள்ளன.
மேலும், பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணம் காணாமல் போயிருந்துள்ளது. குறிப்பாக, வீட்டின் பின்பகுதியில் ஓடு பிரிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அத்தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் வடிவேல் குமார் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், 22 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், கொள்ளையடித்துச் சென்ற நபர் வீட்டின் நடுவே மலம் கழித்துச் சென்றுள்ளாr. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட விஏஒ சஸ்பெண்ட்.. வைரலான வீடியோவால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!