கோயம்புத்தூர்: நம் நாட்டின் இயற்கை வளங்களை அழியாமலும், தங்களது சுய நலத்திற்காக அழிக்காமலும் இன்று வரை அவற்றை பேணி பாதுகாத்து தன்னிறைவோடு வாழ்ந்து வருபவர்கள் பழங்குடியின மக்கள். ஆனால் இன்றைய காலங்களில் அவர்களுக்கான உரிமைகள் பலவாறு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது.
அவர்களுக்கான கல்வி, மருத்துவம், அத்தியாவசிய தேவைகள் சரியாக அவர்களை சென்றடைவதில்லை என பல குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான பழங்குடியின மக்களின் குழந்தைகள் செல் அனீமியா எனப்படும் ரத்த சோகை நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பழங்குடியின மக்களுக்காக, அகழி பகுதியில் இலவச மருத்துவ தகவல் மையம் நடத்தி வருபவர் உமா பிரேமன். இவர் அட்டப்பாடியை சுற்றியுள்ள பழங்குடியின கிராமங்களை சார்ந்த மாணவர்களுக்கென, ஆனைகட்டி கோட்டத்துறை பகுதி அருகே அப்துல் கலாம் பெயரில் இலவச பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த பள்ளியில் அட்டப்பாடியை சுற்றியுள்ள பழங்குடியின கிராமங்களை சார்ந்த 150 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் உள்ள தனித் திறமைகளை கண்டறிந்து, அதற்குத் தகுந்தவாறு அவர்களை தயார் செய்தும் வருகிறார் உமா பிரேமன்.
இங்கு பயிலும் மாணவர்களுக்கு பழங்குடியின பாடல்கள் மற்றும் இசை கருவிகளை இசைக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு குறும்படம் எடுக்கவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த பயிற்சியை பெற்ற மாணவர்கள் இதுவரை ஒரு ஆல்பம் சாங்- ஐயும், குறும்படத்தையும் தயாரித்து இயக்கி உள்ளனர்.
இவ்வாறு இவர்கள் தயாரித்த மிஸ்ஸிங் சேப்டர் (Missing chapter) எனும் முதல் குறும்படமானது, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய குழந்தை உரிமைகள் தொடர்பான திரைப்பட விழாவில் பேட்டிக்கு தேர்வாகி பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த பள்ளியில் 6ஆம் வகுப்பு பயிலும் பழங்குடியின மாணவர்களான சினிமோல், நிதீஸ், ஆகாஷ், தர்னீஷ், அமித்தா, ஜேம்ஸ் ஆகியோர் இந்த படத்தை தயாரித்து இயக்கி உள்ளனர்.
பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்கு பள்ளி பருவத்தில், அறிவியல் பாட புத்தகத்தில் வரக்கூடிய (human reproduction) எனும் மனித இனப்பெருக்கம் குறித்த பாடத்தை ஆசிரியர்கள் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும். சிறு வயதிலேயே உடல் குறித்த சரியான புரிதல் இல்லாததால் நாம் வளரும்போது பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
இந்நிலையில் இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் ஏற்படாமல், மாணவர்களுக்கு உடல் குறித்த கல்வி நடத்தப்படவேண்டியதற்கான அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் விளக்கும் வகையில் மாணவர்கள் இந்த 5 நிமிட குறும்படத்தை தயாரித்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், "ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்த குறும்படத்தை எடுத்துள்ளோம்.
ஆறாம் வகுப்பு படிக்கக் கூடிய மாணவர்கள் இணைந்து ஒளிப்பதிவு, வசனம் என அனைத்தையும் நாங்களே செய்துள்ளோம். ஐந்து நிமிடம் ஓடும் இந்த குறும்படம் தற்போது அண்ணா பல்கலைக்கழக போட்டி தேர்வுக்கு சென்றுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என தெரிவித்தனர்.
இது குறித்து பள்ளியின் தாளாளர் கூறுகையில், "அட்டப்பாடி பகுதியில் பழங்குடியின மக்களுக்காக இலவச மருத்துவ தகவல் மையம் நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாகவே பழங்குடியின மாணவர்களுக்கு இலவச கல்வி எனும் திட்டம். சமீபத்தில் மாணவர்கள் இயக்கி தயாரித்த குறும்படம் அண்ணா பல்கலைக்கழக போட்டி தேர்வுக்கு சென்று தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
மாணவர்கள் மட்டுமே இணைந்து இப்படத்தை உருவாக்கி உள்ளனர். நாங்கள் எப்படி செய்ய வேண்டும் என ஐடியா மட்டுமே கொடுத்தோம். பள்ளி மாணவர்கள் கல்வி கற்கும்போது சந்திக்கும் சிக்கல்களையும் மாணவர்களின் உரிமை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
அப்துல் கலாம் பள்ளி மாணவர்கள், (STUDENTS RIGHT) மாணவர்கள் உரிமை எனும் பேரில் தங்களது உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பும் வகையில் உருவாக்கியுள்ள இந்த குறும்படம் மற்றும் இதன் நோக்கம், அனைத்து பள்ளி மாணவர்களை சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 6-ம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள விழாவில் திரையிடப்பட்டு விருது வழங்குவதற்கான இறுதி பட்டியலில், இந்தக் குறும்படமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.