சென்னை: சென்னை அடையார் பகுதியில் உள்ள பரமேஸ்வரி நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் காமாட்சி சந்தானம். இவர் தெரியாமல் தனது ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைத் தவறவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உர்பேசர் சுமீத்தின் பேட்டரியில் இயங்கும் வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் சி.பாலு.
தற்போது பாலுவின் தீவிரக் கண்காணிப்பு காரணமாக, குப்பைகளைப் பிரிக்கும் போது இந்த தங்க நகையை கண்டுபிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, காமாட்சி சந்தானத்தின் தங்க நகை தொலைந்த தகவலை அறிந்த பாலு தங்க நகையை உரியவரிடம் நேரில் சந்தித்து ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து காணாமல் போன தங்க நகை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்த காமாட்சி சந்தானம் தம்பதியினர் தூய்மை பணியாளர் குழுவை நேரில் அழைத்து நன்றி தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த தகவல் அறிந்த அதிகாரிகளும், சக ஊழியர்களும் பாலுவுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது குப்பையில் தவறவிட்ட தங்க நகையை அதன் உரிமையாளரிடம் தேடிச் சென்று தூய்மைப் பணியாளர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல, அண்மையில், சென்னை விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் தேவராஜ் என்பவர், தவறுதலாக தொலைத்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை ஓட்டுநரான அந்தோணிசாமி மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
அதேபோல், அடையாறு அருகே வேலாயுதராஜா தெரு, மண்டலம் 13, வார்டு 171-ல் தூய்மைப் பணியாளராக உள்ள ரவி என்பவர் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 5 சவரன் தங்கச் சங்கிலியைக் குப்பையில் இருந்து மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: திமுக முப்பெரும் விழா 2024: மு.க. ஸ்டாலின் விருது யாருக்கு?