ஈரோடு: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று (ஏப்.05) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மற்றும் தாளவாடி மலைக் கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ஆ.ராசா, "திமுக ஆட்சியில் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கடம்பூர் மற்றும் தாளவாடி மலைப்பகுதிகளில் மலைவாழ் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
குறிப்பாக தாளவாடியில் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வரின் காலை உணவுத் திட்டம், பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
மதவாத ஆட்சி செய்யும் மத்திய அரசைப் பார்த்து வெளிநாட்டினர் சிரிக்கின்றனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்ததற்கு ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் கண்டிக்கின்றனர் அதற்கு மோடி, இது இந்து நாடு அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார். மேலும், ஐநா சபை கண்டிக்கிறது. இப்படி, ஐநா சபையே கண்டிக்கிற அளவுக்குக் கேவலமாக ஆட்சி செய்யும் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல, மோடி கையில் சிக்கியுள்ள இந்தியா நாரி நசுங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது. இந்தியாவைக் காப்பாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறவேண்டும்" என்று அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆ.ராசா, "நீலகிரியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் வெற்றி பெறுவேன் என அவர் கூறுவது அவரின் நம்பிக்கை. அதை நாம் ஏன் கெடுப்பானேன். நீலகிரி மாவட்டத்தில் டேன் டீ தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் போனஸ் உள்ளிட்ட எதையுமே கடந்த அதிமுக ஆட்சியில் செய்து தரவில்லை.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நானே பேசி தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளேன். முதல்வர் ஸ்டாலினைப் பற்றிப் பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அருகதையும் இல்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: துரை வைகோ மீது அதிருப்தியா? கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூறுவது என்ன? - திருச்சி கள நிலவரம்!