நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்ககூடிய அந்த தனியார் பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் பணிபுரியும் ஓர் ஆசிரியர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் பயிலும் 13 வயது மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.
தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில், அந்த ஆசிரியர் பல மாணவிகளிடம் இதுபோன்று பாலியல்ரீதியான சீண்டல்களை மேற்கொண்டதாக தெரிய வந்தது. தொடர்ந்து மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், தலைமை ஆசிரியர் விசாரித்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து தலைமை ஆசிரியர் மாவட்ட குழந்தை நல அதிகாரிக்கு கொடுத்த தகவலின் பேரில் விசாரித்த அதிகாரி, நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆஷா ஜவகர் தலைமையில் போலீசாரின் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில், வடமாநிலம் ஒன்றிலிருந்து இங்கு வந்து பணியாற்றிவரும் அந்த ஆசிரியர் பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதுகுறித்து உடனே குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சீமான் மீது வழக்குப்பதிய தீவிரம் காட்டும் சைபர் கிரைம் போலீஸ்.. காரணம் என்ன?