கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் உள்ள டவுன்ஹால் பகுதியில் கோனியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோனியம்மன் கோவை நகரின் காவல் தெய்வமாகக் கருதப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழாவானது மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை ஒட்டி, தினமும் கோனியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும், இந்த தேர்த் திருவிழாவைக் காண கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பல்வேறு அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழ்நிலையில், கோவை மாவட்டம் காந்தி பார்க் பகுதியில் இறைச்சிக் கடை ஒன்றை நடத்தி வரும் முகமது அயாஸ் என்பவர், அவரது கடையில் விற்பனை செய்யப்படும் ஆடு மற்றும் கோழி இறைச்சிகளின் கழிவுகளை, கோனியம்மன் கோயிலின் தேர்நிலை திடல் (தேர்முட்டி) பகுதியில் உள்ள கோனியம்மன் தேர் அருகில் வீசிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முகமது அயாஸின் இந்தச் செயலுக்கு அப்பகுதி மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வந்த சூழலில், தொடர்ச்சியாக இறைச்சிக் கழிவுகள் தேர் அருகில் வீசிச் செல்வதாகக் கூறி, இது தொடர்பாக உதவி காவல் ஆய்வாளர் தியாகராஜன் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், இந்து மதத்தினரிடையே அமைதியை சீர்குலைத்து மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் முகமது அயாஸ் மீது 153A (சாதி, மத ,இன மொழி தொடர்பாக விரோத உணர்வுகளைத் தூண்டுதல்), 290 (தொல்லை கொடுத்தல்), 504 (அமைதியை சீர்குலைத்தல்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது அயாஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊட்டி தாவரவியல் பூங்காவில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்.. அச்சத்தில் மக்கள்!