சென்னை: சென்னையில் இருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 10.15 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் 174 பயணிகள் ஏறி அமர்ந்து விட்டனர். அதையடுத்து, விமானம் ஓடு பாதையில் ஓடத் தொடங்குவதற்கு முன்னதாக, பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணியும்படி அறிவுறுத்தப்பட்டது.
அதன்பின்பு, பயணிகள் சீட் பெல்ட் அணிந்துவிட்டனரா என்று விமான பணிப்பெண்கள் சரி பார்த்தபோது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (30) என்ற பயணி, தனது இருக்கையில் அமர்ந்தபடி புகைப்பிடித்துக் கொண்டிருந்துள்ளார். இதை பார்த்ததும் விமான பணிப்பெண்கள், விமானத்திற்குள் புகைப்பிடிக்க அனுமதி கிடையாது. எனவே, சிகரெட்டை உடனடியாக அணையுங்கள் என்று கூறியுள்ளனர்.
ஆனால், விமான நிலையத்தில் இருந்த அத்தனை பாதுகாப்பு சோதனையையும் மீறி எவ்வாறு விமானத்திற்குள் சிகரெட் கொண்டு வந்தார் என்று விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், அந்தப் பயணி என்னால் புகைப்பிடிக்காமல் இருக்க முடியாது எனக் கூறி, தொடர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், சக பயணிகள் அவரிடம் கூறியும் பயணி ஆறுமுகம் கேட்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, விமான பணிப்பெண்கள் விமான தலைமை விமானியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதையடுத்து, விமானத்தின் கதவுகள் உடனடியாக திறக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி புகைப்பிடித்துக் கொண்டிருந்த பயணி ஆறுமுகத்தை வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து கீழே இறக்கியுள்ளனர்.
அதோடு, அந்த பயணியின் உடைமைகளும் கீழே இறக்கப்பட்டு, மலேசிய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் பின்பு, அந்த விமானம் 173 பயணிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 11.07 மணிக்கு சென்னையிலிருந்து கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையே, விமானத்திலிருந்து ஆஃப்லோட் செய்யப்பட்ட பயணி ஆறுமுகத்தை, இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், பயணி ஆறுமுகம் வேலைக்காக மலேசியா சென்று கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதன் பின்பு ஆறுமுகத்தை கைது செய்த போலீசார், அவர் மீது பாதுகாக்கப்பட்ட இடத்தில் தடையை மீறி புகைப்பிடித்தது, விமான பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாப்பிள்ளையுடன் கேசுவல் போட்டோ ஷூட்.. தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் டுவிஸ்ட்!