சேலம்: சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி சின்னமாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் மனைவி பூங்கொடி (54). இவர்களது மகன் சுப்ரமணி (29). பூங்கொடியின் சகோதரர் சிவக்குமார் அரசிராமணியை அடுத்த ஆத்துக்காடு பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
பூங்கொடி மற்றும் அவரது சகோதரர் சிவக்குமாருக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்ததால், இரு குடும்பத்தினரும் பேசிக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர். இதனிடையே சிவக்குமாரின் மகள் சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை எழுதிவிட்டு தற்போது விடுமுறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று மாலை சிவக்குமாரின் மகள் அரசிராமணி அடுத்த குள்ளம்பட்டி பகுதியில் உள்ள பால் மையத்தில் பால் ஊற்றி விட்டு சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வழியில் அவருக்காக காத்துக்கொண்டிருந்த பூங்கொடி மகன் சுப்பிரமணி, மாணவியை நிறுத்தி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.
இதனை ஏற்காத மாணவியை, சுப்பிரமணி காரில் கடத்திச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், அவரது பிடியிலிருந்து தப்பிச் சென்ற மாணவி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரி அளித்தனர்.
அதன்படி, மாணவியை கடத்த முயன்ற அத்தை பூங்கொடி மற்றும் அவரது மகன் சுப்பிரமணி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? அமலாக்கத்துறை, சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Delhi Excise Policy Case