திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அந்த சிறுமியின் உடல்நிலை சரியில்லாத நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். இதனையடுத்து, சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அச்சிறுமியிடம் விசாரித்தபோது, 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாத்தா, இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பிரகாஷ் (24), பவா பாரதி (22), பரணிகுமார் (21), ஜெயகாளீஸ்வன் (19), மதன்குமார் (19), நந்தகோபால் (19) மற்றும் 14, 15 மற்றும் 16 வயதான 3 சிறுவர்கள் என மொத்தம் 9 பேர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதேபோல, 13 வயதுடைய மற்றொரு சிறுமியையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 9 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், கைதான ஆறு இளைஞர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 3 சிறார்களும் கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் நேற்று (மே 13) இரவு தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனை அறிந்த அதிகாரிகள் அச்சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்பொழுது அந்த சிறுவன் உடல்நிலை சீராகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், சிறுவனின் தற்கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 9 பேர் போக்சோவில் கைது; திருப்பூரில் பகீர் சம்பவம்!