சென்னை: சென்னை மயிலாப்பூர் பிடாரி கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் மத்தியாஸ் ஆரோக்கியராஜ். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 10 ஆண்டுகளாக சாலையிலும், கோவில் வாசல்களிலும் தங்கி வந்துள்ளார். கிடைக்கும் பணத்தில் மது அருந்திக்கொண்டு சுற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், ஆரோக்கியராஜ் நேற்று இரவு சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். ரயில் நிலைய மேலாளரிடம் ரயில் பயணி ஒருவர் இது குறித்து தகவல் தெரிவித்த நிலையில், ரயில் நிலைய மேலாளர் திருவான்மியூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ரயில் நிலையத்தில் மதுபோதையில் இருந்த இரண்டு நபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, அதன் மூலம் நடை பாதையில் இருந்து ஒருவர் லூயிசை தள்ளி உள்ளார். இதில் நகரும் படிக்கட்டுகளில் மேலிருந்து விழுந்த அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க: "அடுத்து என்ன செய்யபோகிறார் என ஆதவ் அர்ஜுனாவிடம் கேளுங்கள்!"- திருமாவளவன் காட்டம்
மேலும், லூயிஸ் உடன் பயணித்த நபர்கள் யார்? எதற்காக இங்கு வந்தார்கள் என்றும் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும், அந்த நேரத்திற்கு ரயில் நிலையத்திற்கு வந்து சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரனை செய்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்ந்து வருவதால் அவரின் மனைவி, பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசாருக்கு தெரியவில்லை எனவும், தீவிர விசாரணைக்கு பின்னர் அவரது தங்கையிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.