நீலகிரி: கோத்தகிரி அருகே கெங்கரை சிவகிரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ் (35). இவர் வாகன ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், விஜயராஜ் நேற்று (அக்.6) பணி இல்லாத காரணத்தால் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது நேற்று மாலை அவர் வீட்டின் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானை வந்திருப்பதாக அருகில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
அதனையறிந்து விஜயராஜும் காட்டு யானையைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு வனத்துறையினர் யானையை விரட்டிக் கொண்டிருந்த போது, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் யானை விரட்டத் துவங்கியுள்ளது. அதனைக் கண்ட அனைவரும், அங்கிருந்த தலைதெறிக்க ஓடியுள்ளனர். அப்போது, கடைசியாக ஓடிய விஜயராஜை யானை ஆக்ரோஷமாக தூக்கி வீசியது.
இதையும் படிங்க: சென்னை வான் சாகச நிகழ்ச்சி; 5 பேர் உயிரிழப்பு!
இதில், பலத்த காயம் அடைந்த விஜயராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு விஜயராஜை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் விஜயராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். அதைத் தொடர்ந்து, விஜயராஜ் இறப்பு குறித்து தகவலறிந்து வந்த சோலூர்மட்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், யானை தாக்கி மனித உயிர்கள் பலியாகி வருவது தற்போது கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதியில் தொடர்கதையாகி விட்டதால், வனத்துறையினர் இதுபோன்று ஊருக்குள் வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்