கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே விளைநிலத்திற்குச் சென்ற விவசாயி, ஒற்றை யானை மிதித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜவளகிரி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்ட வந்த நிலையில், முதற்கட்ட நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், அருகில் உள்ள மலை கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் வனத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் தாக்கி வருகிறது. இந்த நிலையில், மேடுமுத்துக்கோட்டையைச் சேர்ந்தவர் விவசாயி அப்பய்யா (54). இவர் விவசாயத் தோட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றிக் கொண்டி கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை திடீரென அப்பபைய்யாவை தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அப்பய்யாவை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் மற்றும் ஜவளகிரி வனத்துறையினர், அப்பய்யாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இது குறித்து தகவல் அறிந்து, அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், அப்பய்யா குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, மாவட்ட வனத்துறை தரப்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.
ஒற்றை யானை மிதித்து விவசாயி இறந்த தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சகர் அறிவழகன் தலைமையிலான வனத்துறையினர், மேடுமுத்துக்கோட்டை பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: விரைவில் ரஜினிகாந்த் பயோபிக்.. ரஜினியாக நடிக்கப்போவது யார்? - Rajinikanth Biopic