தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையண்ட் நகரில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தனியார் வங்கி ஏ.டி.எம்-ற்குச் சென்ற மர்ம நபர், அங்கிருந்த சிசிடிவி கேமரா, சென்சார் போன்றவற்றை உடைத்து பணத்தை திருட முயற்சித்துள்ளார். ஆனால், பணத்தை எடுக்க முடியாத நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி காவல்துறையினர் இச்சமபவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
அதே போன்று, கடந்த மார்ச் 28ஆம் தேதி இரவு, புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டுடன்காடு பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம் மற்றும் கோரம்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்-இல் மர்ம நபர் கண்காணிப்பு கேமராவில் கருப்பு நிற மையைத் தெளித்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். ஒரே நாளில் புதுக்கோட்டையில் உள்ள வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பரநகரில் உள்ள ஒரு வங்கியின் பூட்டுகளை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க மர்ம நபர் முயற்சி செய்துள்ளார். ஆனால், வங்கியில் இருந்து பணத்தை எடுக்க முடியாததை அறிந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்கள் மற்றும் ஏடிஎம் சர்வீஸ் நிறுவன ஊழியர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார், இச்ச்சம்பவங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தூத்துக்குடி கோரம்பள்ளம் சோரீஸ்புரத்தைச் சேர்ந்த ஜேசுராஜ் மகன் காட்வின் ஜோஸ் (29) என்பவர், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டையில் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் திருட முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், போலீசார் காட்வின் ஜோஸை கைது செய்து, அவரிடமிருந்து திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.