ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வானாபாடி கிராமத்தில் உள்ள பழைய ரைஸ் மில் தெருவைச் சேர்ந்தவர் இந்திராணி (48). இவருக்கு திருமணமாகாத நிலையில், தனது அண்ணன் சீனிவாசனுடன் பூர்வீக வீட்டில் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்களது தந்தை கணேசன் வானாபாடியில் உள்ள பூர்வீகச் சொத்தான மாடி வீட்டை இந்திராணியின் பெயருக்கு உயில் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.
அதனால், இதுதொடர்பாக அண்ணன் - தங்கை இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவ்வப்போது தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே, சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு அது நிலுவையில் உள்ளது. இருப்பினும், இந்திராணிக்கு திருமணமாகாத காரணத்தால், வீட்டை தனது பெயருக்கு மாற்றிக் கொடுக்குமாறு அண்ணன் சீனிவாசன் பலமுறை கேட்டு வந்ததாகவும், அதற்கு இந்திராணி சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், நேற்று மாலை சொந்த வேலைக்காக ராணிப்பேட்டை வரை சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய இந்திராணியை, மதுபோதையில் கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். அப்போது, தன்னை காப்பாற்றிக் கொள்ள இந்திராணி சிறிது தூரம் ஓடியுள்ளார். இருந்தும் விடாமல் துரத்திச் சென்று கண்மூடித்தனமாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.
அதில், தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த இந்திராணி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். பின்னர், இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார், உயிருக்காக போராடிக் கொண்டிருந்த இந்திராணியை மீட்டு, சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தங்கையை தாக்கிய சீனிவாசனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சம்பந்தப்பட்டவர்கள் இரவோடு இரவாக கைது - மு.க.ஸ்டாலின்