தேனி: தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேனி அருகே கொடுநார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் கல்லூரியில் உள்ள தனி அறையில் சிசிடிவி கண்காணிப்புடன் மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் தேனி மாவட்ட போலீசார் என பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேனியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர், வாக்குப்பெட்டி வைத்திருக்கும் தனியார் கல்லூரியில் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் அவரை தடுத்து நிறுத்தி, பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் அந்த இளைஞரை ஒப்படைத்துள்ளார்.
மேலும், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வாக்குப்பெட்டி வைத்துள்ள தனியார் கல்லூரியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் ராஜேஷ் கண்ணன் என்றபதும், அந்தக் கல்லூரியில் முன்னாள் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை தொகுதி தேர்தல் முடிவுகளை தள்ளி வைக்க கோரிய வழக்கு முடித்து வைப்பு.. முழு விவரம்! - Coimbatore Lok Sabha Election Case